“அப்போதே அம்பதி ராயுடுவை நான் அதிகம் மதிப்பிட்டேன்” – மனம் திறக்கும் தோனி

எல்லா பேட்ஸ்மேன்களாலும் இதைச் செய்ய முடியாது

By: May 17, 2018, 4:06:30 PM

ஆசை தம்பி

‘வயதானவர்களின் கூடம்’, ‘சென்னை சீனியர் கிங்ஸ்’ என்றெல்லாம் கிண்டல் செய்தவர்களுக்கு போதுமான அளவு பதிலடி கொடுத்துவிட்டது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். குறிப்பாக, கிண்டலடிக்கப்பட்ட சீனியர் லிஸ்டில் இடம்பெற்றிருந்த அம்பதி ராயுடு, வகை வகையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ‘உள்ளேன் ஐயா’ என்ற ரீதியிலேயே இருந்த ராயுடு, இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ‘வருது வருது விலகு, விலகு… வேங்கை வெளியே வருது’ என்கிற ரேஞ்சில் உள்ளார்.

இந்த சீசனில், இதுவரை 12 போட்டிகளில் ஆடியுள்ள ராயுடு, ஒரு சதம், இரண்டு அரை சதம் உதவியுடன் 535 ரன்கள் குவித்துள்ளார். ஆவரேஜ் 48.63. ஸ்டிரைக் ரேட் 152க்கும் மேல். 48 பவுண்டரிகளையும், 29 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.

2010ம் ஆண்டு முதல் ஐபிஎல்-லில் ஆடிவரும் அம்பதி ராயுடு, இவ்வளவு ரன்களையும் குவித்ததில்லை.. இவ்வளவு ஆவரேஜும் வைத்ததில்லை. இவ்வளவு ஸ்டிரைக் ரேட்டும் கொண்டதில்லை… இவ்வளவு சிக்ஸர், பவுண்டரியையும் விளாசியதில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததால் தான், ராயுடு இந்தளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பதில்லை. இத்தனை வருடங்கள் அவருக்கான ‘ஸ்பேஸ்’ கிடைக்கவில்லை. தற்போது சிஎஸ்கேவில் அந்த ஸ்பேஸ் கிடைக்க, கிங்காக வலம் வருகிறார் ராயுடு.

நடப்பு சீசனில், மிரட்டலான பவுலிங் கொண்ட சன்ரைசர்ஸ் அணியை, லீக் சுற்றில் இருமுறையும் ஊதித் தள்ளிய பெருமை ராயுடுவையே சாரும். அவர் விளாசிய சதம் கூட அந்த அணிக்கு எதிராகத் தான்.

ஆந்திராவைச் சேர்ந்த அம்பதி ராயுடு விக்கெட் கீப்பிங் பணியிலும் ஈடுபடுபவர். தேவைப்பட்டால், இவரால் விக்கெட் கீப்பிங்கும் செய்ய முடியும். முதன் முறையாக 2000ம் ஆண்டில், ‘ஏசிசி’ அண்டர் 15 தொடரில் அறிமுகமான ராயுடு, அதே தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி ஆட்ட நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

இதையடுத்து அண்டர் 16 அணியில் இடம்பிடித்த ராயுடு, இந்தியா அண்டர் 17 அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின், அண்டர் 19 அணியில் இடம்பிடித்த ராயுடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கினார். மூன்று போட்டியில் 291 ரன்களை குவித்தார். அந்தத் தொடரில் மூன்று போட்டியையும் இந்திய அணி வென்று, இங்கிலாந்தை வாஷ் அவுட் செய்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் ராயுடு.

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில், 304 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா ஆடிய போது, 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றது. அப்போது களத்தில் நின்றே ஒரே பேட்ஸ்மேன் ராயுடு மட்டுமே. விஸ்வரூபம் எடுத்த ராயுடு, 169 பந்தில் 177 ரன்களை விளாசி, தனி ஆளாக அணியை வெற்றிப் பெற வைத்து, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தையே ஆச்சர்யப்பட வைத்து, அவர்களிடம் இருந்து பாராட்டும் பெற்றார்.

இதன்பின் ரஞ்சித் தொடர்களில் அசத்திய ராயுடு, 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், முதன் முதலாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வானார். 2012ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில், மனோஜ் திவாரி காயம் அடைந்ததால், மாற்று வீரராக இந்திய அணியில் ராயுடு சேர்க்கப்பட்டார். சர்வதேச இந்திய அணியில் முதன்முறை இடம்பிடித்தாலும், ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, சிறிய தொடர்களில் இந்தியா ஆடும் போது மட்டும் இந்திய அணியில் தேர்வானார்.

என்னதான் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடினாலும், அவருக்கென்று ஒரு பெயர் இதுவரை உருவாகவில்லை. ஆனால், இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் காட்டிய மெர்சலான ஆட்டம், மீண்டும் அவருக்கு இந்திய அணியில் இடத்தைக் கொடுத்துள்ளது.

இதனால், மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் ராயுடு. ஆனால், அவரை விட மகிழ்ச்சியாக இருப்பது தோனி தான்.

அம்பதி ராயுடு குறித்து தோனி மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்னரே, அம்பதி ராயுடுவுக்கு தேவையான இடம் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஏனெனில், நான் அவரை மிக அதிகளவிற்கு மதிப்பிட்டிருந்தேன்.

ஐபிஎல் தொடர் தொடங்கிய போது, அம்பதி ராயுடு தான் சென்னை அணியின் ஒப்பனராக களமிறங்க வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். அதேபோல், கேதர் ஜாதவை 4 அல்லது 5வது வீரராக களமிறக்கவும் தீர்மானித்து இருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஜாதவ் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறிவிட்டார்.

பொதுவாக, டி20 போட்டிகளில் சில அணிகள், ஸ்பின்னர்களை வைத்து பவுலிங்கை தொடக்கி, பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பார்கள். ஆனால், அம்பதி ராயுடு ஒருவர் தான் தொடக்க வீரராக களமிறங்கினாலும் ஃபாஸ்ட், ஸ்பின் என இரு விதமான பவுலர்களையும் வெளுக்க ஆரம்பிக்கிறார். எல்லா பேட்ஸ்மேன்களாலும் இதைச் செய்ய முடியாது” என ராயுடுவை தோனி புகழ்ந்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Dhoni interview about ambati rayudu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X