அடுத்தடுத்து இரு நிகழ்வுகளில் பொறுமையை இழந்த மகேந்திர சிங் தோனி!

300 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளேன்.. நான் என்ன பைத்தியமா?

ஆசைத் தம்பி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்டார். இப்போது ‘மிஸ்டர் கூல்’ என்று அழைக்கப்படுகிறார். எப்படிப்பார்த்தாலும் அவர் கூல் தான். ஆனால், மிஸ்டர் கூல் தனது பொறுமையை இழந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் குல்தீப் யாதவ், பிரபல ‘வாட் த டக்’ நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

குல்தீப் கூறுகையில், “விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டன்சி செய்த இலங்கைக்கு எதிரான டி20 தொடர் கடந்த ஆண்டு இந்தூரில் நடைபெற்றது. 2வது டி20 போட்டியின் போது, நான் பந்தை தூக்கி முன்னால் வீசிய போதெல்லாம் சிக்சர் பறந்தது. கிரவுண்டும் மிகச்சிறியதாக இருந்ததால், எனது ஓவர் கடுமையாக அடிக்கப்பட்டது. எனது ஓவரில் ஒவ்வொரு சிக்ஸ் அடிக்கப்பட்ட பிறகும் நான் மஹி பாயைத்தான் (தோனி) பார்த்தேன். ஆனால் அவர், ‘இன்னும் தூக்கி முன்னால் வீசு.. விக்கெட் எடுப்பது தூரத்தில் இல்லை’ என்பார்.

நான் அப்போது 4வது ஓவரை வீசிய போது பேட்ஸ்மென் என் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி அடித்தார். அப்போது தோனி என்னிடம் வந்து கவரில் உள்ள பீல்டரை அங்கிருந்து அகற்றி டீப்பில் நிறுத்துமாறும் பாயிண்ட் பீல்டரை முன்னால் வரச்செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

ஆனால் நான் ‘இல்லை மஹி பாய், இப்போது உள்ள வியூகம் சரிதான்’ என்றேன். நான் இப்படிக் கூறியதைக் கேட்டதும் அவருக்கு கடும் கோபம் வந்தது. உடனே அவர், (Kya main pagal hoon yaha pe, mai 300 ODI khela hoon You think I’m mad? I’ve played 300 ODIs) ‘300 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளேன்.. நான் என்ன பைத்தியமா?’ என்று சத்தம் போட்டார். அதன்பிறகு, தோனி சொன்னது போன்று பீல்டிங் நிறுத்தியவுடன் எனக்கு விக்கெட் கிடைத்தது. அந்தப் போட்டியில் நான் 52 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன்” என்றார்.

இதேபோன்று, கடந்த பிப்ரவரி மாதம் தோனி தனது கட்டுப்பாட்டை இழந்து கோபப்பட்ட சம்பவம் ஒன்று நடந்தது. இதனை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 போட்டி செஞ்சூரியினில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்கள் குவித்தது. ஒருக் கட்டத்தில் இந்திய அணி ஐந்து ஓவர்களில் 45-3 என்ற நிலைமையில் இருந்தது. குறிப்பாக, கேப்டன் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டாகி இருந்தார். இப்படியொரு நிலையில் இருந்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

மனீஷ் பாண்டே 48 பந்துகளில் 79 ரன்களும், தோனி 28 பந்துகளில் 52 ரன்களும் விளாசி இறுதி வரை களத்தில் இருந்தனர். ஆனால், அதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா எந்தவித நெருக்கடியும் இன்றி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்கள் எடுத்து வென்றது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கிளாசீன் 30 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். கேப்டன் டுமினி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அப்போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இறுதி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட மனீஷ் பாண்டே, பந்தை மிட் ஆனில் அடித்து விட்டு, தோனியை கவனிக்காமல் ரன்னிங் கொடுத்தார். கவனமாக செயல்படாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மணீஷ் பாண்டேவே நோக்கி “ஏய்! …… எங்கு பார்த்து கொண்டு இருக்கிறாய். இங்கே பாரு.. ஏன் அங்கு பார்த்துக் கொண்டிருக்கிறாய்? நான் பேட்டிங்கின் முடிவில் நிற்கிறேன்” என்று சீற்றமாக பேசினார் தோனி.

தோனியின் இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில், இப்படி அவர் ஆக்ரோஷமாக.., அதுவும் வெளிப்படையாக கோபப்பட்டதை யாரும் பார்த்திருக்க முடியாது. அதற்கு அடுத்த பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்ட தோனி, மேற்கொண்டு இரண்டு பவுண்டரிகளையும் விளாசினார்.

தோனியின் இந்த கோபம் அவரது ரசிகர்கள் உட்பட அனைவரையும் அப்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரில் தோனி தன்னிடம் கோபப்பட்டது குறித்து குல்தீப் யாதவ் பேட்டி அளித்திருக்கிறார்.

கோபம் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. அதுவும், இந்தியாவில் மதம் போன்று பார்க்கப்படும் கிரிக்கெட்டில், பிரஷர் மிகவும் அதிகம். அப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளை கையாளும் போது கோபம் கொப்பளிப்பதை யாராலும் தடுக்க முடியாது. இருப்பினும், இதுபோன்ற சில சம்பவங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், தோனி தலை சிறந்த கேப்டன் கூல் என்பதை மறுக்க முடியாது.

×Close
×Close