தன்னை இகழ்ந்தவர்களை வெகு சீக்கிரத்தில் புகழ வைப்பது என்பது உலகில் வெகு சிலருக்கே வாய்க்கும். அப்படிப்பட்ட வெகு சிலரில் தோனியும் ஒருவர் என்பதை இன்று மீண்டும் அவர் நிரூபித்துவிட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனியின் பொறுமையான இன்னிங்சை கடுமையாக அனைவரும் விமர்சிக்க, அடுத்த போட்டியில், வின்னிங் சிக்ஸுடன் அரைசதம் அடித்து விமர்சித்தவர்களை சைலன்ட் ஆக்கினார். இப்போது, கோப்பை யாருக்கு என்ற இறுதிப் போட்டியிலும், கடைசி வரை களத்தில் நின்று அசத்தி, டோட்டலாக விமர்சித்தவர்களை ஷட் டவுன் செய்திருக்கிறார் தோனி.
தவிர, நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர் நாயகன் விருதையும் வென்று எதிர்ப்பாளர்களை வேற்று கிரகத்திற்கு இடம் பெயர வைத்திருக்கிறார்.
முதல் போட்டி - 51(96)
இரண்டாவது போட்டி - 55*(54)
மூன்றாவது போட்டி - 87*(114)
ஆவரேஜ் - 193
ஸ்டிரைக் ரேட் - 73.11
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்திருப்பது தோனியின் கான்ஃபிடன்ட்டை அப்பட்டமாக காட்டுகிறது. இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் போதும், இந்த அளவிற்கு சிறப்பாக ஆடியிருப்பது தான்.
தோனியின் இந்த பெர்ஃபாமன்ஸ் நிச்சயம் உலகக் கோப்பையில் இந்தியாவை வழிநடத்த உள்ள கேப்டன் விராட் கோலிக்கு ஆறுதல் தான். தேர்வுக் குழுவின் மனதில் ரிஷப் பண்ட் ஒரு ஆப்ஷனாக இருந்தாலும், இப்போது முழு நம்பிக்கையோடு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தோனியை அவர்கள் தேர்வு செய்வார்கள். அடுத்த நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் தோனி அசத்தும் பட்சத்தில், உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள அனைத்து அணிகளுக்கும் அது மாபெரும் எச்சரிக்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
விமர்சித்தாலும் சரி... பாராட்டினாலும் சரி... எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், அணிக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்தால் போதும் என்று நினைப்பதால் தான், உலகில் உள்ள மற்ற அணிகளுக்கு தோனி போன்ற ஒரு கேப்டனோ, வீரரோ கிடைப்பதில்லை.