உலகக் கோப்பை 2019 அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது குறித்தான விவாதங்களை விட, தோனி ஓய்வுப் பெறுவது குறித்த விவாதமே முதன்மையில் உள்ளது. இல்லை.. இல்லை... இந்த விவாதம் மட்டுமே உள்ளது. அதற்கான பதில் ஒருவரிடம் மட்டும் தான் உள்ளது... தோனி...!
ஆனால், இந்த நிமிடம் வரை அவரது ஓய்வு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ரசிகர்கள் தங்கள் பக்கம், தோனி ஓய்வு பெறக் கூடாது என்று விதவிதமான ஹேஷ்டேக்குகளை உருவாக்கி தினம் இந்தியளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்த டிரெண்டிங் ஹேஷ்டேக்குகளில் தமிழக ரசிகர்களின் ட்வீட்களை மிக அதிகளவில் காண முடிகிறது.
இது ஒருபுறமிருக்க, இந்தியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடரில் இருந்து கேப்டன் விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ் குமார், ஷமி ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, கோலி, பும்ரா மற்றும் பாண்ட்யாவுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட உள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்தியா களமிறங்க உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் கோலி அணிக்கு திரும்புகிறார்.
இந்நிலையில், தோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி, ஜூலை 17 அல்லது 18 அன்று மும்பையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளது. அதில் தோனியின் பெயர் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை வரை தோனி விளையாடுவார் என வியூகிக்கப்பட்ட நிலையில், தோனி ஓய்வு முடிவில் தெளிவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை அவரே உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக பிசிசிஐ நிர்வாகிகள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியே தோனியின் சர்வதேச கிரிக்கெட்டின் கடைசிப் போட்டியாக இருக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.