தோனியின் பேட்டிங்கைக் காண்பதற்காகவே சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போன தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இன்று தோனியின் விக்கெட்டை எடுத்து அவருக்கு பக்கத்தில் நின்று உரையாடுகிறார். தோனியும் வருண் சக்ரவர்த்தியும் உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேர்த்தியாக சுழற்பந்து வீசும் வருண் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் டி 20 அணிக்காகவும் தேர்வாகியுள்ளார். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் கேப்டன் தோனியின் விக்கெட்டை வருண் சக்ரவர்த்தி வீழ்த்தினார்.
இதற்கு முன்பு இரு அணிகளும் மோதிய முதல் லீக் போட்டியிலும் தோனியின் விக்கெட்டை வருண் சக்ரவர்த்திதான் வீழ்த்தினார். போட்டி முடிவடைந்த பிறகு பேசிய வருண் சக்ரவர்த்தி, “தான் 3 வருடங்களுக்கு முன் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்காகவே சேப்பாக்கம் ஸ்டேடியம் சென்றதாகவும் தான் தோனியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் கூறினார். இதையடுத்து, தோனியுடன் சேர்ந்து வருண் சக்ரவர்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதே போல, நேற்றும் போட்டி முடிவடைந்த பிறகு, வருண் சக்ரவர்த்தியும் தோனியும் சில நிமிடங்கள் உரையாடினார்கள். அவர்கள் உரையாடிய வீடியோவை கொல்கத்தா அணி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ குறித்து “முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து ரசித்தது முதல் இப்போது வரை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சி.எஸ்.கே கேப்டன் தோனியும் தமிழக வீரர் கே.கே.ஆர் அணியின் வருண் சக்ரவர்த்தியும் உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"