Ms-dhoni: இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டன்களுள் முக்கியமானவராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி நடத்திய அனைத்து வடிவ போட்டிகளிலும் கோப்பைகளை வென்று சாதனையை படைத்துள்ளது.
இதேபோல், ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியுள்ளது. இந்நிலையில், 42 வயதான தோனி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த சீசன் தான் அவரது கடைசி சீசனாக இருக்கும் என ரசிகர்கள் பரபரப்பாக பேசி வரும் நிலையில், சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், இது அவரது கடைசி சீசனாக இருக்கும் என்பதை அவரால் மட்டுமே கூற முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
"அது எனக்குத் தெரியாது. கேப்டனைப் பொறுத்த வரையில் அவர் உங்களுக்கு நேரடியாகப் பதிலளிப்பார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் எங்களிடம் கூறவில்லை" என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அளித்த பேட்டியில் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறியிருந்தார்.
தோனியின் உடற்தகுதி குறித்து காசி விஸ்வநாதன் பேசுகையில், "இப்போது அவர் நன்றாக இருக்கிறார். அவர் தனது மறுவாழ்வைத் தொடங்கியுள்ளார். ஜிம்மில் வேலை செய்ய ஆரம்பித்தார். மேலும், இன்னும் 10 நாட்களில் அவர் வலைப் பயிற்சியை செய்யத் தொடங்குவார்." என்று கூறினார்.
அதிருப்தி
இந்நிலையில், பிரபல ராப்பரான எம்.சி.ஸ்டானுடன் எம்.எஸ்.தோனி விளம்பர படத்திற்காக இணையப் போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கொண்டுவந்துள்ளது. மேலும், எம்.சி.ஸ்டான் - எம்.எஸ்.தோனி ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்ட நிலையில், இதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள ரசிகர்கள் கமெண்டில் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“