Farmer Protest: விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை கடந்த 13ம் தேதி தொடங்கினர். பஞ்சாப்-அரியானா இடையிலான ஷாம்பு எல்லையிலும், கானாரி எல்லையிலும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மத்திய அரசுடன் நடத்திய 4-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது, மத்திய மந்திரிகள் முன்வைத்த யோசனையை தொடர்ந்து, கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் போராட்டத்தை விவசாயிகள் நிறுத்தி வைத்தனர்.
இதற்கிடையே, கடந்த 21ம் தேதி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். பஞ்சாப்-அரியானா இடையிலான கானாரி எல்லையில் தடுப்புகளை நோக்கி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் நடந்தது. அதில், சுப்கரன் சிங் என்ற 22 வயதான விவசாயி பலியானார். இதைத்தொடர்ந்து, போராட்டத்தை 2 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முடிவு செய்வதாகவும் விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
மீண்டும் களத்தில் இறங்கிய 20 -21 போராட்ட அமைப்புகள்
இந்த நிலையில், 22 வயது விவசாயி சுப்கரன் சிங்கின் மரணம், அவரை "தியாகி" என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருவதால், போராடும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளது.
கடந்த புதன்கிழமை கானௌரி எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது சுப்கரன் கழுத்தின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டு இறந்தார். இதனால் விவசாயத் தலைவர்கள் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தினர். புதன் கிழமை முதல் அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வருகிறது. காவல்துறையை பிரேத பரிசோதனை செய்ய விவசாயிகள் அனுமதிக்கவில்லை.
பாரதி கிசான் யூனியன் (சித்துப்பூர்) தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் மற்றும் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி கன்வீனர் சர்வன் சிங் பந்தேர் ஆகியோர் மாநில அரசு சிங்கை "தியாகி"யாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்ற்னர். மேலும், அவரது "படு கொலை"க்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக மக்கள் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது கருப்புக் கொடிகளை ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
டெல்லி எல்லையில் 2020-21 வேளாண் சட்டம் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) அமைப்பு, ஹரியானா அரசு அதிகாரிகள் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அவிக் சாஹா, சிங்கின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு, அவரது மரணம் குறித்து நீதி விசாரணை மற்றும் போராட்டத்தின் போது சேதமடைந்த டிராக்டர்களுக்கான செலவை ஹரியானா ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா பேசிய கூட்டத்தில், பஞ்சாபிலிருந்து 37 பேர் உட்பட, நாடு முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாய சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய தொழிற்சங்கங்களுடன் இணைந்து பிப்ரவரி 23ஆம் தேதி நாடு தழுவிய கறுப்பு தினமாக பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் அங்கத்தவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவார்கள்.
பாரதிய கிசான் யூனியன் (BKU) தலைவர் ராகேஷ் டிகாயிட், பிப்ரவரி 26 அன்று டெல்லிக்கு செல்லும் நெடுஞ்சாலைகளில் டிராக்டர் அணிவகுப்பு மற்றும் மார்ச் 14 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியை அறிவித்துள்ளார். “அப்போது அரசாங்கம் எங்களைத் தடுக்கிறதா என்று பார்ப்போம்." என்று பேசினார்.
இதற்கிடையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், "போலீசாரின் அத்துமீறல்களால் இளம் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சோகமான சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில்" வெள்ளிக்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
உளவுத்துறை ஏடிஜிபி ஜஸ்கரன் சிங்கிடம் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பாரதிய கிசான் யூனியன் (சித்துபூர்) செய்தித் தொடர்பாளர் குர்தீப் சிங் சாஹல் பேசுகையில், “நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். காலை 11 மணி முதல் கூட்டம் நடைபெறுகிறது. சித்து மூஸ்வாலாவின் உடலை அவருக்கு நீதி கிடைக்காமல் தகனம் செய்யாமல் இருந்திருந்தால், அவரது பெற்றோர்கள் அங்குமிங்கும் ஓட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. அதிலிருந்து கற்றுக்கொண்டோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்,'' என்றார்.
பஞ்சாப் அரசு அதிகாரி ஒருவர் பேசுகையில், மாநில அரசின் பார்வை அனுதாபமானது... அவரது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்படும். ஆனால் அழுத்தத்தின் கீழ் முடிவு எடுக்கப்படாது. ஒரு சாஃப்ட் கார்னர் இருப்பதாக என்னால் சொல்ல முடியும். அதனால்தான் முதல்வர் பகவந்த் மான் மரணத்திற்குப் பிறகு வீடியோ மூலம் மாநிலத்திற்கு உரையாற்றினார்" என்று கூறினார்.
முதல்வர் அறிவிப்பு
இதனிடையே, போராட்டத்தின்போது பலியான விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண உதவியாக அளிக்கப்படும் என்று பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மன் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Dilli Chalo’ march: As anger grows over youth’s death, key player of ’20-21 farm protest back in fray
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“