இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் வீரர் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். இந்நிலையில், 78-வது சுதந்திர தினத்தன்று, 'ஆல் டைம் இந்தியா லெவன்' அணியை வெளியிட்டு இருந்தார். இந்த லெவன் வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் புகழ் பெற்ற கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ். தோனியின் பெயர் இடம் பெறவில்லை.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Dinesh Karthik apologises for not picking MS Dhoni in his all-time XI, says it was a ‘blunder’
தினேஷ் கார்த்திக் ஆல் டைம் ஆல் ஃபார்மட் இந்திய அணியில், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, ஜஸ்ப்ரித் பும்ரா, ஜஹீர் கான் ஆகிய வீரர்கள் இடம் பெற்று இருந்தது. அந்தப் பட்டியலில் 12-வது வீரராக ஹர்பஜன் சிங்கை தேர்வு செய்திருந்தார் டி.கே.
இந்த அணியின் கேப்டன் யார் என்று அறிவிக்கவில்லை. இதேபோல், விக்கெட் கீப்பர் யார் என்றும் அறிவிக்கவில்லை. அத்துடன் 1983-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவுக்கு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் அணியில் இடம் பெறவில்லை. ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வாங்கிக் கொடுத்த ஜாம்பவான் வீரர் தோனி பெயரும் இடம்பெறவில்லை.
இது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த லெவன் வீரர்கள் பட்டியலை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கை கடுமையாக விமர்சனத்தினர். இந்த நிலையில், தனது 'ஆல் டைம் இந்தியா லெவன்' வீரர்கள் பட்டியலில் தோனியை சேர்க்காதது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்து, அதற்காக பகிரங்க மன்னிப்பை கோரியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் கிரிக்பஸ்ஸிடம் பேசுகையில், "நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். உண்மையாகவே இது மிகப்பெரிய தவறு. என்னுடைய இந்த பேச்சு வெளியானது பின்னர் தான் இது குறித்து உணர்ந்தேன். நான் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும்போது பல்வேறு விசயங்கள் நடைபெற்றன.
நான் விக்கெட் கீப்பரை மறந்துவிட்டேன். அதிர்ஷ்டமாக ராகுல் டிராவிட் அணியில் இருந்தார். நான் பகுதி நேர விக்கெட் கீப்பரை தேர்வு செய்திருப்பதாக எல்லோரும் நினைத்திருப்பார்கள். நான் உண்மையாகவே ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பர் என நினைக்கவி்லை. விக்கெட் கீப்பராக இருந்த நான் விக்கெட் கீப்பர் இருப்பதை மறந்துவிட்டேன் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இது ஒரு தவறு" என்று அவர் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
"என்னைப் பொறுத்தவரை, தல தோனியை இந்தியாவுக்கு மட்டுமின்றி எந்த பார்மட்டிலும் அவரை சேர்க்கலாம். இதுவரை விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் அவர் மிகச்சிறந்த வீரர் என்று நான் உணர்கிறேன். நான் அந்த அணியை மீண்டும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதில் 7-வது தல தோனிக்கு மாற்றுவேன். மேலும் அவர் அங்கு இருக்கும் எந்த இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பார்." என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“