Dinesh Karthik Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இந்நிலையில், இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது டி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இந்திய அணியில் அதிகபட்சமாக அரைசதம் விளாசிய தினேஷ் கார்த்திக் 55 ரன்களும், ஹர்திக் பாண்டியா 46 ரன்களும், இஷான் கிஷன் 27 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக லுங்கி என்கிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தென்ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் டெம்பா பவுமா (8), குயின்டன் டி காக் (14), டுவைன் பிரிட்டோரியஸ் (0), சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களும் இந்திய பந்துவீச்சு தாக்குதலுக்கு தாக்குபிடிக்கமால் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக ரஸ்ஸி வான் டெர் டுசென் 20 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியின் வேகம், மற்றும் சுழல் தாக்குதலில் வசமாக சிக்கி கொண்ட தென்ஆப்பிரிக்கா 87 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இதனால் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2-2 என்கிற சமநிலையை எட்டியுள்ளது. இந்திய அணி தரப்பில் மிகச்சிறப்பாக பந்துகளை வீசி, மிரட்டி எடுத்த அவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
டி20-ல் அரைசதம் அடித்த டிகே… புதிய சாதனை…
இந்த ஆட்டத்தில் இந்திய அணி அதன் தொடக்க மற்றும் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன் சேர்க்க திணறி வந்தது. இந்த தருணத்தில் களமாடிய மிடில்-ஆடர் வீரர் தினேஷ் கார்த்திக் தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்த அவர் 9 பவுண்டரிகளையும் ஓடவிட்டு அரைசதம் அடித்தார். அவர் 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும், தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஆட்டம் மெச்சும் படியானதாக இருந்தது. சர்வதேச போட்டியில் இதுபோன்ற ஒரு தடாலடி ஆட்டத்திற்கு 'வெறி பிடித்த வேங்கை போல்' பல நாட்களாக அவர் காத்திருந்தார். 37 வயது 16 நாட்களில், டி20 போட்டியில் அரைசதம் அடித்துள்ள அவர், டி20-ல் அரைசதம் அடித்த மூத்த இந்திய வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 36 வயது 229 நாட்களில் தோனி அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
"இப்படி கூறும் போது எனக்கு அதிக வயதாகிவிட்டதை போல் உணர்கிறேன் <சிரிக்கிறார்>. நான் வெவ்வேறு தலைமுறை வீரர்களுடன் விளையாடி இருக்கிறேன். அதில் 22, 21 பேர் ஓய்வு பெற்றதை நான் அறிவேன். ஆனால் இன்னும் அணியில் தொடர்வதை நல்லது என்று நினைக்கிறேன்” என்று இன்னிங்ஸ் இடைவேளையின் போது டிகே தெரிவித்தார்.
நடப்பு ( 2022 ஐபிஎல்) ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியில் விக்கெட் கீப்பர் வீரராக களமாடி இருந்த தினேஷ் கார்த்திக் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரது நேர்த்தியான மற்றும் மேம்படுத்திய ஆட்டம் பலரது புருவங்களை உயர்ச் செய்தது. அவரது ஆட்டம் குறித்து ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் புகழந்து தள்ளினர்.
இதற்கிடையில், டிகே தான் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து களமாட வேண்டும் என்கிற விருப்பத்தை தெரிவித்து இருந்ததார். அவரது விருப்பம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் நிறைவேறியது. சர்வேதச போட்டியில் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தன்பக்கம் அனைவரையும் மீண்டும் ஒருமுறை ஈர்த்துள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil