இந்திய விக்கெட் கீப்பிங்கில், நிகரற்ற சாதனையை தன் வசம் வைத்திருப்பவர் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பருக்கான முகத்தையே மாற்றியவர் தோனி என்றால் மிகையல்ல..
Advertisment
தோனி எனும் புயலில் சிக்கி காணாமல் போன விக்கெட் கீப்பர்களில் மிக முக்கியமானவர் தினேஷ் கார்த்திக். தோனியை போன்று அபாரமான அதிரடி வீரர் இல்லையென்றாலும், ஸ்டைலிஷான பேட்ஸ்மேன் + துடிப்பான விக்கெட் கீப்பராக இந்திய அணிக்குள் நுழைந்தார். தோனி பிரபலம் ஆவதற்கு முன்பே இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ், தனது அட்டகாசமான விக்கெட் கீப்பிங்கால் தேர்வுக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தினார்.
குறிப்பாக, 2004ம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தினேஷ் கார்த்திக்கின் மிரட்டலான ஒற்றை ஸ்டெம்பிங்கால் இந்திய அணி, யாரும் எதிர்பார்க்காத வெற்றியைப் பதிவு செய்தது.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 204 ரன்கள் மட்டும் எடுக்க, எளிதான இலக்கை நோக்கி களமிறங்கியது இங்கிலாந்து. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அரைசதம் கடந்து இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்.
அவரது விக்கெட்டை மட்டும் வீழ்த்திவிட்டால், இந்தியாவின் வெற்றி உறுதி என்ற நிலையில், 74 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்த வாகனுக்கு, ஹர்பஜன் சிங் பந்து வீச வந்தார்.
அப்போது, வாகனுக்கு லெக் சைடில் வைடாக ஹர்பஜன் பந்து வீச, அதை இறங்கி வந்து ஆட முயன்ற வாகன் தவற விட, பந்து லெக் ஸ்டெம்ப்பிற்கு மிகவும் வைடாக சென்றது. நிச்சயம் இதனை விக்கெட் கீப்பர்கள் தவற விட்டிருக்க வாய்ப்புண்டு.
ஆனால், சமயோஜிதமாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக், பந்தை தடுத்து, டைவ் அடித்து, நொடிப் பொழுதில் வாகனை ஸ்டெம்ப்பிங் செய்து மிரள வைத்திருப்பார்.
இறுதியில், 181 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டாக்க, இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
கிரிக்கெட்டின் டாப் 10 பெஸ்ட் ஸ்டெம்பிங்கை பட்டியலிட்டால், தினேஷ் கார்த்திக்கின் இந்த மெர்சல் டைவிற்கு எப்போதும் இடமுண்டும்.