17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். அவர் அணியில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் கிரிக்கெட் வீரர் என்பதைத் தவிர, அற்புதமான வர்ணனையாளராகவும் உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில், விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர்களான இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் அதர்டன் ஆகியோருடன் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களை விரிவாக பேசினார். அப்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர் யார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "உண்மையைச் சொல்வதென்றால், மூன்று வடிவங்களிலும் விளையாடி, அவர் இருக்கும் விதத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அவரது (பும்ரா) திறமையில் யாரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதனால்தான், இந்த நேரத்தில், அவர் இந்த கிரகத்தின் மிகவும் மதிப்புமிக்க கிரிக்கெட் வீரர் என்று நான் நினைக்கிறேன்.
அவர் மூன்று வடிவங்களிலும் விளையாடுவதால், அந்த 3 வடிவங்களிலும் வலிமையாகவும் திறமையாகவும் இருக்கிறார். இது போன்ற திறன்மிகுந்த, அவரின் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு வீரரைப் பற்றி என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது,” என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“