Dinesh Karthik | IPL 2024 | Royal Challengers Bangalore | Rajasthan Royals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்ட இந்தத் தொடரில், அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் (குவாலிஃபையர் 1) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (புதன்கிழமை) நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியை ருசித்தது. இதன் மூலம், அந்த அணி 2வது தகுதிச்சுற்று போட்டிக்கு (குவாலிஃபையர் 2) முன்னேறியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ஐதராபாத் அணியுடன் மல்லுக்கட்டுகிறது.
ஓய்வை அறிவித்த டி.கே - ஆரத் தழுவி பிரியாவிடை
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல் தொடரில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணி தோல்வியடைந்து பிளே ஆஃப்பில் இருந்து வெளியோறியதை தொடர்ந்து, விக்கெட் கீப்பர் வீரரான தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு, தனது விக்கெட் கீப்பிங் கிளவுஸை தூக்கி காட்டி தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்தார். அப்போது அவருக்கு சக பெங்களூரு அணி வீரர்களும், ராஜஸ்தான் அணியினரும் மரியாதை செய்தனர். மேலும், விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் அவரை கட்டியணைத்து பிரியாவிடை அளித்தார்.
தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், குஜராத், மும்பை ஆகிய அணிகளுக்காக மொத்தமாக 257 போட்டிகளில் விளையாடி 4,842 ரன்களை எடுத்துள்ளார். 466 பவுண்டரிகள், 161 சிக்ஸர்களுடன் 22 அரைசதங்களை அவர் விளாசியுள்ளர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“