இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கடந்த 2004 செப்டம்பரில் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 19 வயதில் அறிமுகமான இவர், கடந்த ஜூன் 1 ஆம் தேதி அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
விக்கெட் கீப்பர் வீரரான தினேஷ் கார்த்திக் 26 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 7 அரைசதங்களுடன் 1025 ரன்களையும், 94 ஒருநாள் போட்டிகளில் 9 அரைசதங்களுடன் 1752 ரன்களையும், 60 டி20 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 686 ரன்களையும் எடுத்துள்ளார். மூன்று வடிவங்களிலும் மொத்தமாக 180 ஆட்டங்களில் ஆடியுள்ள அவர், ஒரு டெஸ்ட் சதம் மற்றும் 17 அரை சதங்களுடன் 3463 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Dinesh Karthik reverses retirement, set to play for Paarl Royals in SA20 2025
மேலும், அவர் 172 ஆட்டமிழப்புகளை செய்துள்ளார். அவற்றில் சில அவுட்ஃபீல்டில் வந்துள்ளன. இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்கமால் தவித்து வந்த அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். 2022 ஐ.பி.எல் தொடரில் 183 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் 330 ரன்கள் எடுத்து மிரட்டி இருந்தார். இதனையடுத்து, அந்த ஆண்டு இறுதியில் நடந்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார். ஆனால், அதுவே இந்திய அணிக்காக அவரது கடைசி ஆட்டமாக அமைந்து போனது.
ஐ.பி.எல் கரியர்
தினேஷ் கார்த்திக் கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், குஜராத், மும்பை ஆகிய 6 6 ஐ.பி.எல் அணிகளுக்காக மொத்தமாக 257 போட்டிகளில் விளையாடி 4,842 ரன்களை எடுத்துள்ளார். 466 பவுண்டரிகள், 161 சிக்ஸர்களுடன் 22 அரைசதங்களை அவர் விளாசியுள்ளர். அவர் 145 கேட்சுகள் மற்றும் 37 ஸ்டம்பிங்குகளை எடுத்ததுடன் 17 சீசன்களில் 5000 ரன்களை நெருங்கி ஐ.பி.எல் வெற்றியாளராக முடித்தார்.
அவர் தனது கடைசி ஆட்டத்தை 2024 ஐ.பி.எல் தொடரில் மே 22 அன்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ஆடினார். இப்போட்டியில், அவர் களமாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்றது. எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணி தோல்வியடைந்து பிளே ஆஃப்பில் இருந்து வெளியோறியதை தொடர்ந்து, விக்கெட் கீப்பர் வீரரான தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்தார். அவருக்கு சக பெங்களூரு அணி வீரர்களும், ராஜஸ்தான் அணியினரும் மரியாதை செய்தனர். மேலும், விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் அவரை கட்டியணைத்து பிரியாவிடை அளித்தார்.
மீண்டும் களத்தில் டி.கே
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் வீரர் தினேஷ் கார்த்திக், தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வவு பெறும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். மேலும் வரவிருக்கும் எஸ்.ஏ.20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் டி-20 லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தொடரில், அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரின் 3-வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையடுத்து, இந்த தொடரின் தூதராக இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டதாக நேற்று திங்கள்கிழமை செய்திகள் வெளியாகின. இந்நிலையில் எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட தினேஷ் கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.
ஓய்வுபெற்ற இந்திய வீரர்களை மட்டுமே வெளிநாட்டு லீக்குகளில் விளையாட பி.சி.சி.ஐ அனுமதித்துள்ளது. சமீபத்தில் ஓய்வு பெற்ற நட்சத்திரங்களில் அம்பதி ராயுடு, யூசுப் பதான், சுரேஷ் ரெய்னா மற்றும் ராபின் உத்தப்பா போன்றோர் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். அவர்களுடன் தற்போது தினேஷ் கார்த்திக் இணைவார்.
Entering the ground again as a player. This time in Africa 🇿🇦 https://t.co/Snn910oIcg
— DK (@DineshKarthik) August 6, 2024
பார்ல் ராயல்ஸ் அணி வீரர்கள் பட்டியல்:
டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, பிஜோர்ன் ஃபோர்டுயின், அண்டில் பெஹ்லுக்வாயோ, தினேஷ் கார்த்திக், மிட்செல் வான் ப்யூரன், கோடி யூசுஃப், கீத் டட்ஜியன், நகாபா பீட்டர், க்வேனா மபாகா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், தயான் கலீம் (டிரேடு)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.