கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை, எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. காரணம், மே மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்.
ஆஸ்திரேலியாவுடன் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கே உலகக் கோப்பைக்கான ரேஸில் அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்பதால், அணித்தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், பிப்.15ம் தேதி அறிவிக்கப்பட்ட ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டிருந்தார். அதேசமயம், டி20 தொடரில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
ஆனால், மற்றொரு விக்கெட் கீப்பட் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், ஒருநாள் மற்றும் டி20 என இரண்டிலுமே இடம் பெற்றிருந்தார். இதனால், தினேஷ் கார்த்திக் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என்று கருதப்பட்டது.
முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், தினேஷ் கார்த்திக்கின் நீக்கத்தை வெளிப்படையாகவே விமர்சித்தார். ரசிகர்களும், சமூக வலைத்தளங்களில், 'இன்னும் என்ன சாதித்தால் தினேஷ் கார்த்திக்கை நம்புவீர்கள்?' , 'அதிர்ஷ்டம் இல்லாத திறமைசாலி' என்று பிசிசிஐ-யை வறுத்துதெடுத்தனர்.
இந்நிலையில், ஹாட்ஸ்டாருக்கு பேட்டியளித்த இந்திய தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், "ரிஷப் பண்ட் vs தினேஷ் கார்த்திக் என்று விவாதிப்பது உண்மையில் ஒரு ஆரோக்கியமான விவாதம் ஆகும். பினிஷர் ரோலில் தினேஷ் சிறப்பாக செயல்பட்டார் என்பது நமக்கு தெரியும். அதேசமயம், ரிஷப் பண்ட் தன் தரத்தை மிக வேகமாக முன்னேற்றி வருகிறார். அபாரமான முதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். இருவரும் சரிசமமான திறமை கொண்ட வீரர்களே. ஆனால், சரியான நேரத்தில் அணிக்கு என்ன தேவையோ, அதற்கேற்பவாறு நாங்கள் முடிவெடுப்போம். ஒட்டுமொத்தமாக அவர் உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று தெரிவித்து இருக்கிறார்.
இதன்மூலம், உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து தினேஷ் கார்த்திக் இதுவரை வெளியேற்றப்படவில்லை என்பதை எம்எஸ்கே பிரசாத் உணர்த்தியிருக்கிறார்.
இந்திய ஒருநாள் அணி (முதல் இரு ஓருநாள் போட்டிகள்):
விராட் கோலி(C), ரோஹித் ஷர்மா (vc), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட், எம் எஸ் தோனி (WK), ஹர்திக் பாண்ட்யா, விஜய் ஷங்கர், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல், லோகேஷ் ராகுல்.
இந்திய ஒருநாள் அணி (கடைசி மூன்று ஓருநாள் போட்டிகள்):
விராட் கோலி(C), ரோஹித் ஷர்மா (vc), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட், எம் எஸ் தோனி (WK), ஹர்திக் பாண்ட்யா, விஜய் ஷங்கர், யுவேந்திர சாஹல், புவனேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல்.
இந்திய டி20 அணி:
விராட் கோலி(C), ரோஹித் ஷர்மா (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், எம் எஸ் தோனி (WK), ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்ட்யா, விஜய் ஷங்கர், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மாயன்க் மார்கண்டே.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.