பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஹங்கேரி வீராங்கனை லூகா ஹமோரியை வீழ்த்தி அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். பதக்க வாய்ப்பையும் அவர் உறுதி செய்தார்.
இந்தநிலையில், குத்துச்சண்டை லீக் சுற்றில் இமானே கெலிஃப் ஒரு 'ஆண்' எனக் குற்றஞ்சாட்டி இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கேரினி போட்டியில் இருந்து விலகியது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து ஏஞ்சலா தனது செயலுக்குப் பின்னர் மன்னிப்பு கோரினார்.
இந்தநிலையில், இமானே கெலிஃப்க்கு ஆதராவாக தி.மு.க எம்.பி கனிமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களின் பெண்மை எப்போதுமே கேள்விக்குறியாகவே இருக்கிறது.
எங்கள் தடகள வீராங்கனை சாந்திக்கும், இப்போது இமான் கலிஃப்-க்கும் அப்படித்தான் இருந்தது, உங்களின் வலிமையும் உறுதியும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
சாந்தி யார்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். இவர் தமிழ்நாட்டிற்காக 50 பதக்கங்களும், இந்தியாவிற்காக 12 சர்வதேச பதக்கங்களும் தடகளத்தில் வென்று கொடுத்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாலின சரிபார்ப்பு சோதனையில் அவர் தோல்வியடைந்ததால் தடகள போட்டியில் பங்கேற்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அவர் அதுவரை பெற்ற பதக்கங்களும் பறிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“