'தோனி ஸ்டெம்புக்கு பின்னால் நின்றால் எல்லை தாண்டாதே'! - ரசிகர்களின் இதயத்தை வென்ற ஐசிசி ட்வீட்

தோனி குறித்த ஐசிசி-யின் இந்த ட்வீட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

வெலிங்க்டனில் நேற்று நடந்த இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முக்கியமான தருணத்தில், தோனி செய்த ரன் அவுட் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

இந்தியா நிர்ணயித்த 253 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து, 31 ஓவர்களில் 135/6 என்று திணறிய நிலையில் சாண்ட்னர், நீஷம் பார்ட்னர்ஷிப் இணைந்து ஸ்கோரை 176 ரன்களுக்கு 6 ஓவர்களில் கொண்டுச் சென்றனர். குறிப்பாக நீஷமின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.  ஷமி, புவனேஸ்வர், பாண்ட்யா என அனைவரது ஓவரிலும் பவுண்டரிகள் பறந்தன. பாண்ட்யா ஓவரில் பேக் டூ பேக் சிக்ஸர்கள் என ஆட்டம் நியூசி கையில் சென்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், இன்னிங்சின் 37வது ஓவரின் 2வது பந்தை கேதர் ஜாதவ் வீச நீஷம் நன்றாகக் காலை நீட்டி ஸ்வீப் ஆட முயன்றார். பந்து சிக்கவில்லை, பேடில் பட்டு பந்து பின்னால் தோனியிடம் சென்றது. இதனையடுத்து ஜாதவ் எல்.பி.முறையீடு எழுப்பினர். ஆனால் அது ஸ்டம்ப் லைனுக்கு வெளியே காலில் வாங்கிய பந்து என்பதால் எல்.பி.கிடையாது. பந்து பின்னால் தோனியிடம் சென்றதை அறியாத ஜேம்ஸ் நீஷம் கிரீசுக்கு வெளியே இருந்தார்.

இதை கவனித்த தோனி, மிகச்சாமர்த்தியமாக பந்தை அண்டர் ஆர்ம் த்ரோ செய்து ஸ்டம்ப்பை பதம் பார்க்க, 44 ரன்களில் நீஷம் ரன் அவுட் ஆனார்.

அதன்பிறகு, நியூசிலாந்தால் எழவே முடியவில்லை. முடிவில், 44.1வது ஓவரில், நியூசி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பேட்டிங்கில் ஏமாற்றினாலும், தோனியின் இந்த ரன் அவுட் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்நிலையில், தோனியின் இந்த தரமான சம்பவத்தை குறிப்பிட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவரை புகழும் வகையில் ட்வீட் செய்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த மல்டி மீடியா கலைஞர் ஒருவர், ட்விட்டரிடம் ஒரு அட்வைஸ் கேட்டிருந்தார். அவர், “எங்கள் வாழ்க்கை மேம்படவும், பிரகாசிக்கவும் சில ஆலோசனைகளை அளியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு சிலர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது குறித்து பதில் அளித்திருந்தனர். அதேபோல் ஐசிசியும் ட்வீட் செய்திருந்தது. அதில், “எம் எஸ் தோனி ஸ்டெம்புகளுக்கு பின்னால் நின்றுக் கொண்டிருக்கும் போது, உங்கள் எல்லையை விட்டு வெளியே வராதீர்கள்!” என்று குறிப்பிட்டுள்ளது.

தோனி குறித்த ஐசிசி-யின் இந்த ட்வீட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close