பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியா தோற்கும்! இப்போதே ஆரூடம் சொல்லும் சேவாக்!

ஒரு போட்டியில் விளையாடும் வீரருக்கு, குறைந்தபட்சம் 48 மணிநேரம் ஓய்வு தேவை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான அட்டவணை கடந்த ஜூலை 24ம் தேதி அறிவிக்கப்பட்டது.  இத்தொடருக்கான போட்டிகள் குரூப் ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெறுகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் வெற்றிபெறும் அணி இடம்பெறுகிறது. ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.

லீக் போட்டிகளுக்கான அட்டவணை:

செப்.15 வங்கதேசம் – இலங்கை
செப்.16 பாகிஸ்தான் – தகுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணி
செப்.17 இலங்கை – ஆப்கானிஸ்தான்
செப்.18 இந்தியா – தகுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணி
செப்.19 இந்தியா- பாகிஸ்தான்
செப்.20 வங்கதேசம் – ஆப்கானிஸ்தான்

இந்த லீக் ஆட்டங்களில், இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும். இதைத்தொடர்ந்து செப். 21 முதல் செப். 26 வரை நான்கு அணிகள் மோதும் இந்த சூப்பர் ஃபோர் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் மோதுகின்றன. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். இறுதி போட்டியானது செப். 28ம் தேதி துபையில் நடைபெறவுள்ளது.

இந்த அட்டவணை குறித்து தான் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கூறுகையில், “ஆசியக்கோப்பை அட்டவணையைப் பார்த்தவுடன் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ஏனெனில், அட்டவணைப்படி இந்திய அணிக்கு ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்து போட்டிகள் உள்ளன. செப்.18ம் தேதி தகுதிச்சுற்று அணியுடன் மோதும் இந்திய அணி, அதற்கு அடுத்த நாளே.. அதாவது, செப்.19ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுவது போன்று அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நாம் விளையாடிய போது ஒவ்வொரு டி20 போட்டிக்கும் இடையே குறைந்தபட்சம் 2 நாட்கள் இடைவெளி இருந்தது. ஆனால், துபாயில் ஒருநாள் போட்டியில் விளையாடப்போகிறோம், வெயில் கடுமையாக இருக்கும். அப்போது ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியாக விளையாடினால், இந்திய வீரர்கள் நிச்சயம் சோர்ந்து விடுவார்கள். என்னைப் பொருத்தவரை இது சரியான அட்டவணை இல்லை. எப்போதும் ஒரு அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் இருபோட்டிகளில் விளையாடவே கூடாது. இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சிப்போட்டியில் ஆடுகளம் மோசமாக இருப்பதாகக் கூறி எசெக்ஸ் அணியுடனான பயிற்சிப் போட்டியை, 4 நாட்களில் இருந்து 3 நாட்களாக பிசிசிஐ குறைத்தது. அதுபோல, ஆசியக்கோப்பை அட்டவணையை பிசிசிஐ நினைத்தால் மாற்ற முடியும்.

ஒரு போட்டியில் விளையாடும் வீரருக்கு, குறைந்தபட்சம் 48 மணிநேரம் ஓய்வு தேவை. ஏனென்றால், ஃபீல்டிங் செய்வதற்காக 3.5 மணிநேரம் களத்தில் நிற்க வேண்டும், பின் பேட்டிங் செய்ய 2 மணிநேரம் களத்தில் நிற்க வேண்டும். ஏறக்குறைய 5.5 மணிநேரம் களத்தில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் குறைந்தபட்சம் 24 மணிநேரம் முதல் 48 மணிநேரம் வரை ஓய்வு தேவை. இந்திய அணி ஆசியக் கோப்பை விளையாடும் நேரத்தில் துபாயில் கடுமையான வெயில் காலமாகும். அதிகமான வெயிலில் இந்திய வீரர்கள் விளையாடும் போது, வீரர்கள் சோர்வில் இருந்து மீண்டுவரத் தாமதமாகும்.

ஆனால், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாவுடன் மோதும் போட்டிக்கு முன்பாக 2 நாட்கள் கேப் உள்ளது. இதனால், அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்துவிடுகிறது. பாகிஸ்தானுடன் இந்தியா மோதினாலே, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பு இருக்கும். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், இப்படிப்பட்ட அட்டவணை இந்திய அணியின் தோல்விக்கே வழிவகுக்கும். இது பாகிஸ்தானிற்கு சாதகமாக அமைந்துவிடும்” என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close