நாடகம் முடிந்தது: ஆட்டம் தொடங்குமா?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் கும்ளே ஏன் பதவி விலகினார் என்ற விபரம் ஏன் வெளியிடப்படவில்லை.

ஜெயதேவன்

கடந்த இரண்டு மாதங்களாக இந்திய கிரிக்கெட்டின் மீது கவிந்திருந்த குழப்ப மேகம் விலகியுள்ளது. இந்திய அணியின் தலைமைப் பொறுப்பாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பந்து வீச்சுப் பயிற்சியாளராக ஜாகீர் கானும் முக்கியமான வெளிநாட்டுப் பயணங்களின்போது மட்டையாட்டத்துக்கான ஆலோசகராக ராகுல் திராவிடும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே மட்டையாட்டப் பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பங்கரும் அந்தப் பொறுப்பில் தொடருவார்.

ரவி சாஸ்திரியின் பங்களிப்பு

பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி தகுதியானவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சிறந்த ஆட்டக்காரர். ஆட்டத்தின் தன்மையையும் அதன் போக்கையும் நுணுக்கமாக அறிந்தவர். உலகின் எல்லா அணிகள் குறித்த விவரங்களும் அவருக்குத் தெரியும். அவரது கிரிக்கெட் நுண்ணறிவுக்கு அவரது நேர்முக வர்ணனைகளே சாட்சி.

kumble - koli

கேப்டன் கோலியுடன் கும்ப்ளே

அது மட்டுமல்ல. இந்திய அணி நெருக்கடியில் இருந்தபோதெல்லாம் அதற்கு வழிகாட்டியாக அமைந்து ஆற்றுப்படுத்தியவர் ரவி சாஸ்திரி. 2007இல் உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே தோற்று இந்தியா வெளியேறியது. இந்திய கிரிக்கெட்டின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அப்போது பயிற்சியாளராக இருந்த கிரேக் சாப்பலுக்கும் இந்திய அணியினருக்கும் இடையே பிணக்கு எழுந்தது. அப்போது வங்கதேசச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. கிரேக் சாப்பலின் பதவிக் காலத்தையும் நீட்டிக்க முடியாது, பயிற்சியாளரை நியமிப்பதற்கு அவகாசமும் இல்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரவி சாஸ்திரியை அணியின் மேலாளராக நியமித்தது. குழப்பத்தில் சிக்கி, தன்னம்பிக்கை இழந்து நின்றிருந்த அணியை அவர் ஆற்றுப்படுத்தி, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தார். மீண்டு எழுந்த இந்திய அணி, 2007இல் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றது. 2010இல் டெஸ்ட் அரங்கில் முதலிடத்தைப் பெற்றது. 2011இல் உலகக் கோப்பையை வென்றது.

2014இல் இங்கிலாந்து சுற்றுப் பயணம் முடிந்ததும் அதே போன்ற தடுமாற்றத்தில் அணி இருந்தது. அப்போது பயிற்சியாளராக இருந்த டங்கன் ஃப்ளெட்சரின் பதவிக் காலம் முடிவடைந்தது. அப்போதும் தன்னம்பிக்கை இழந்திருந்த அணியை ஆற்றுப்படுத்த ரவி சாஸ்திரியின் துணையை வாரியம் நாடியது. அவரும் தன் பங்கைச் செவ்வனே செலுத்தினார். இந்தியா ஆஸ்திரேலியாவில் நன்றாக ஆடியது. தன் திறமைகளைப் பட்டை தீட்டிக்கொண்டு முன்னேறியது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பயிற்சியாளருக்கான தேர்வு நடந்தபோது ரவி சாஸ்திரி அதற்கு விண்ணப்பித்தார். சாஸ்திரியின் பங்களிப்பையும் அணியினருடன் அவருக்கு இருந்த நல்லுறவையும் வைத்துப் பார்க்கும்போது அவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என்றே தோன்றியது. ஆனால், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்கூலி, வி.வி.எஸ். லட்சுமணன் ஆகியோரைக் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு நடத்திய நேர்முகத் தேர்வில் அனில் கும்ப்ளே தேர்ந்தெடுக்கப்பட்டார். கும்ப்ளே சிறப்பாகவே பணியாற்றினார். ஆனால் ஒரே ஆண்டில் அவருக்கும் கேப்டன் விராட் கோலிக்குமிடையே உரசல்கள் எழுந்ததையொட்டி மீண்டும் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கோலி – கும்ப்ளே விவகாரம்

இந்த முறையும் விண்னப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இறுதியில் ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அத முடிவை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. கேப்டனுடன் கலந்தாலோசிக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. கோச் விஷயத்தில் கேப்டனின் கருத்து முக்கியமானதுதான் என்றாலும் இந்தத் தேர்வு நடப்பதற்கான காரணமும் நடந்த விதமும் ஆரோக்கியமானதாக இல்லை என்பது தெளிவு. கும்ப்ளேவுக்கும் கோலிக்கும் பிரச்சினை என்றால் வாரியத்தின் அதிகாரிகளோ ஆலோசனைக் குழுவைச் சேர்ந்தவர்களோ இருவரையும் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். பிரச்சினையைக் கண்டறிந்து அதைக் களைய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அது முறையாகச் செய்யப்படவில்லை.

கேப்டனின் கருத்து முக்கியம்தான். ஆனால், கேப்டன் சர்வாதிகாரியாக நடந்துகொள்ளக் கூடாது என்பதும் முக்கியம்தான். இதுபற்றி கோலியிடம் யாரும் பேசியதாகத் தெரியவில்லை. கும்ப்ளேயைப் போன்ற ஒரு மகத்தான சாதனையாளர் நடத்தப்பட்ட விதம் இந்திய கிரிக்கெட்டுக்கு இழுக்கு.

ரவி சாஸ்திரி கோச் ஆகும் தகுதி கொண்டவர்தான். ஆனால், எந்தத் தகுதியின்மை காரணமாக கும்ப்ளே அந்தப் பதவியை இழந்தார் என்பது பொது வெளிக்கு வர வேண்டாமா? ஓராண்டுக்கு முன்னால் ரவி சாஸ்திரியுடன் போட்டியிட்டு, ஆலோசனைக் குழுவினரின் முழு நம்பிக்கையையும் பெற்று கோச் ஆக நியமிக்கப்பட்ட கும்ப்ளே செய்த தவறு என? கடந்த ஓராண்டில் இந்திய அணி பெற்ற அபரிமிதமான வெற்றிகளில் அவருக்குப் பங்கில்லையா? கேப்டனுக்கும் கோச்சுக்கும் இடையே கருத்து வேற்றுமை எனபது இயல்புடானே? அது பேசித் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைதானே? இந்த அம்சங்கள் எல்லாம் விவாதிக்கப்பட வேண்டாமா? கோலி இன்று ஒரு சூப்பர் ஸ்டார் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ள முடியுமா?

நாடகங்கள் எதற்கு?

கோலியின் விருப்பம்தான் முகியம் என்றால் விண்ணப்பம், நேர்முகத் தேர்வு ஆகிய நாடகங்கள் எதற்கு? கோலியுடன் பேசி அவருக்கு ஏற்றவரையே தேர்ந்தெடுத்திருக்கலாமே? ரவி சாஸ்திரிதான் கோலியின் தேர்வு என்பது முதலிலேயே தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஆலோசனைக் குழுவினரின் தேர்வும் அதுவே. எனில் தேர்வு நாடகம் எதற்காக?

கோலியின் விருப்பம் நிறைவேறினாலும், ஆலோசனைக் குழுவினர் ஜாஹீர் கான், திராவிட் ஆகியோரையும் பயிற்சியாளர்களின் அணியில் இணைத்திருப்பது முக்கியமானது. சாஸ்திரி – கோலி கூட்டணி சர்வாதிகாரத் தைமையாகச் செயல்பட விடாமல் தடுக்கும் அரனைப் போல இந்தத் தேர்வுகள் செயல்படலாம்.

எதிர்நோக்கும் சவால்கள்

இந்தச் சர்ச்சையின் களங்கம் படர்ந்திருந்தபோதிலும் இந்திய அணியின் கொடி பட்டொளி வீசிப் பறக்கவேசெய்கிறது. இன்று நம்பிக்கையூட்டும் விதத்தில் அணியின் செயல்பாடு இருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி, மேற்கிந்தியத் திவுகளில் ஓரிரு தோல்விகள் எனச் சில சறுக்கல்கள் இருந்தாலும் இந்த அணி திறமையானது, சாதனைகளை நிகத்தக்கூடியது, வெற்றிபெறும் முனைப்பும் அதற்கான உழைப்பும் கொண்டது என்பதில் ஐயம் இல்லை. கோலியின் ஆட்டமும் இதில் முக்கியமான ஒரு காரணம் என்பதிலும் மறுப்பில்லை.

கடந்த நான்கைந்து ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், வி.வி.எஸ். லட்சுமணன், சவுரவ் கங்கூலி, வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ஜாஹீர் கான் முதலான சாதனையாளர்கள் ஓய்வுபெற்ற நிலையில் உருப்பெற்றுவரும் இளம் அணி தற்போது ஓரளவு நிலைபெற்றுவிட்டது. இன்று இந்த அணியில் இருப்பவர்களில் சிலர் அனுபவம் மிகுந்த ஆட்டக்காரர்களாகிவிட்டார்கள். விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் என இந்த அணியிலும் சர்வதேச சாதனையாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். உள்நாட்டில் சிறப்பாகவும் வெளிநாடுகளில் சோடைபோகாமலும் இந்த அணி ஆடிவருகிறது. ஆட்டத்தில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவது இயல்பு. ஆனால், ஒரு அணி தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு வருகிறதா என்பது முக்கியமானது. அந்த வகையில் இந்த அணி சீராகவே செயல்பட்டுவருகிறது.

இனி இதுபோன்ற அர்த்தமற்ற, உப்புச் சப்பற்ற நாடகங்களை அரங்கேற்றாமல் இருக்க வேண்டியது வாரியத்தின் கடமை. கேப்டனோ, கோச்சோ, யாராக இருந்தாலும் அணியை விட, ஆட்டதைவிட மேம்பட்டவர்கள் அல்ல என்பதை உனர்த்த வேண்டிய கடமையும் வாரியத்துக்கு இருக்கிறது. பயிற்சியாளர் தொடர்பான சர்ச்சையை ஒதுக்கி வைத்துவிட்டுத் தன் ஆட்டத்தில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டிய கடமை அணிக்கு இருக்கிறது. டுத்து வரும் இலங்கைச் சுற்றுப் பயணம் இந்தியாவின் திறமைகளை முழுமையாகச் சோதிக்கக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஆண்டு இறுதியில் அணி மேற்கொள்ளவிருக்கும் தென்னாப்பிரிக்கச் சுற்றுப் பயணம் பல சவால்களை முன்வைக்கும். அணி அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close