Duleep Trophy 2023: West Zone vs South Zone final Tamil News: கர்நாடகாவில் நடைபெற்று வரும் துலீப் டிராபி 2023 தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடருக்கான இறுதிப்போட்டி நாளை புதன் கிழமை (ஜூலை.12) முதல் ஜூலை 16ம் தேதி வரை பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. இப்போட்டியில் பிரியங்க் பஞ்சால் தலைமையிலான மேற்கு மண்டல அணியும் ஹனுமா விஹாரி தலைமையிலான தெற்கு மண்டல அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
துலீப் டிராபி தொடரில் இதுவரை 34 துலீப் டிராபி இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியுள்ள மேற்கு மண்டல அணி அதில் 19ல் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், 13 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள தெற்கு மண்டல அணி 14 வது பட்டத்தை குறிவைக்கும். மேலும், கடந்த ஆண்டு நடந்த துலீப் டிராபி இறுதிப் போட்டியில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மேற்கு மண்டலத்திடம் 294 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தெற்கு மண்டல அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட மூத்த சேதேஷ்வர் புஜாரா மேற்கு மண்டல அணி சார்பில் களமாடி மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மத்திய மண்டலத்திற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அவர் சதம் விளாசி 133 ரன்களை குவித்தார். இது அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற உதவியது.
மேற்கு மண்டல அணியில் இடம்பிடித்துள்ள சர்ஃபராஸ் கான் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதேபோல், தெற்கு மண்டல அணியின் கேப்டன் ஹனுமா விஹாரி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விஹாரி கடைசியாக 2022ல் இங்கிலாந்துக்கு எதிரான பர்மிங்காம் டெஸ்டில் இந்தியாவுக்காக விளையாடினார். அதே நேரத்தில் வாஷிங்டன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக வெள்ளை பந்து தொடரில் விளையாடினார்.
தெற்கு மண்டல அணியின் துணை கேப்டன் மயங்க் அகர்வால் ஓரளவுக்கு மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் வடக்கு மண்டலத்திற்கு எதிரான காலிறுதியில் இரண்டு அரைசதங்களை (76 - 54) அடித்து இருந்தார். அதே ஃபார்மை அவர் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும் இப்போது சில காலமாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த வீரர்களாக உள்ளனர். ஆனால் பி சாய் சுதர்ஷன், ஆர் சாய் கிஷோர், வைசாக் விஜயகுமார், வித்வத் கவேரப்பா போன்ற இளம் வீரர்கள் வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
தெற்கு மண்டலம்:
ஹனுமா விஹாரி (கேப்டன்), மயங்க் அகர்வால் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், ரிக்கி புய் (வாரம்), ஆர் சமர்த், வாஷிங்டன் சுந்தர், சச்சின் பேபி, பிரதோஷ் ரஞ்சன் பால், சாய் கிஷோர், வி கவேரப்பா, வி வைஷாக், கே.வி.சசிகாந்த், தர்ஷன் மிசல், என் திலக் வர்மா.
மேற்கு மண்டலம்:
பிரியங்க் பஞ்சால் (கேப்டன்), சேதேஷ்வர் புஜாரா, சூர்யகுமார் யாதவ், ஹர்விக் தேசாய் (வி.கே.), பிருத்வி ஷா, ஹெட் படேல் (வி.கே.), சர்ஃபராஸ் கான், அர்பித் வசவதா, அதிட் சேத், ஷம்ஸ் முலானி, கேதர் ஜாதவ், தர்மேந்திரசிங் ஜடேஜா, துஷார் தேஷ்பான்டே , சிந்தன் காஜா, அர்சான் நாக்வாஸ்வல்லா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil