Advertisment

பிராவோ போட்ட பக்கா பிளான்... சொல்லி அடித்த ஆப்கான்: வீதிகளில் இறங்கி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் - வீடியோ!

தசைப் பிடிப்பால் அவதியுற்ற குல்பாடின் நைப்பை தனது தோளில் சுமந்தபடி பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் மைதானத்தை சுற்றி வந்தார். வீரர்கள் களத்தில் இருந்த ரசிகர்களுடன் வெற்றியைப் பார்கிர்ந்து கொண்டனர்.

author-image
WebDesk
New Update
Dwayne Bravo rashid khan Afghanistan over Bangladesh T20 World Cup 2024 Fans celebrate Streets video Tamil News

குரூப் 1-ல் இடம் பெற்றிருந்த இந்திய அணி நேற்று திங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில் பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

T20 World Cup 2024 | Afghanistan | Bangladesh: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்த தொடர், இந்திய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை நடக்கும் போட்டியுடன் முடிவடைந்தது. அவ்வகையில், சூப்பர் 8 சுற்று முடிவில் குரூப் 2-ல் இருந்து தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. 

Advertisment

இதேபோல், குரூப் 1-ல் இடம் பெற்றிருந்த இந்திய அணி நேற்று திங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில் பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. ஆதாலால், ஏற்கனவே வங்கதேச அணியை வென்ற ஆஸ்திரேலியா அரைஇறுதிக்குள் செல்லவும், முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அரைஇறுதிக்குள் நுழையவும், இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி முக்கிய போட்டியாக பார்க்கப்பட்டது. 

முன்னதாக, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு கால்இறுதிப் போட்டி போல் பார்க்கப்பட்ட நிலையில், அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கியதோடு, அசத்தலான வெற்றியையும் பெற்றது. இதனால், தோல்வி கண்ட ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை வங்கதேசம் வெல்ல வேண்டும் என பிராத்தனை செய்தது. 

இந்த சூழலில் நாக்-அவுட் போட்டியைப் போல் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது போட்டி அரங்கேறிய செயின்ட் வின்சென்ட் மைதானத்தில் எடுக்கப்பட்ட பார் -ஸ்கோரை விடக் குறைவு ஆகும். தொடர்ந்து, 116 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய வங்கதேசம் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. வங்கதேச பேட்ஸ்மேன்கள் ஆடிய ஒவ்வொரு ஷாட்டும் ஆப்கான் கையில் இருக்கும் போட்டியை தட்டிப் பறிப்பது போல் தோன்றியது. 

இதனிடையே, 2 முறை மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் வங்கதேசம் 19 ஓவர்களில் 114 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இப்படி மாற்றப்பட்டது போட்டி வங்கதேசம் பக்கம் திரும்பியது போல் தெரிந்தது. இதனை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்களும் ஓரளவு குஷியில் இருந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தான் பவுலர்கள் பந்துவீச்சில் மிரட்டிக் கொண்டிருந்தனர். இதனால் வங்கதேசம் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது. 

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் நிலைத்து விளையாடி அணியை இலக்கை நோக்கி நெருங்க வைத்தார். நூர் அகமது பந்தில் அவர் விரட்டி பவுண்டரி ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் அடி வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்தது. அவர் அரை சதம் அடித்து விட்டார் என அறிவிக்கப்பட்ட செய்தி, ஆப்கானியர்களை சோக வெள்ளத்தில் இழுக்க தயாராகிக் கொண்டிருந்தது. இப்படி சென்ற ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றி பெற கடைசி 12 பந்துகளுக்கு 12 ரன்கள் தான் தேவைப்பட்டது. 

'அழுத்தம் நிறைந்த போட்டியில் அழுத்தத்தை சமாளிக்கும் அணிக்கு தான் வெற்றி உண்டு' என்கிற ஒரு கூற்று உண்டு. அதற்கு ஏற்ப, அழுத்தத்தை சமாளித்துக் கொண்டிருந்த, ஐ.பி.எல் அனுபவம் நிறைந்த ரஷீத் கானின் ஆப்கான் அணி சார்பில், 18வது ஓவரை வீச நவீன்-உல்-ஹக் வந்தார். களத்தில் இருந்த லிட்டன் தாஸ் -  தஸ்கின் அகமது ஜோடி முதல் 3 பந்துகளில் 3 சிங்கிள்களை எடுத்தது. 4வது பந்தில் இன்சைடு எட்ஜ் அடித்த தஸ்கின் அகமது போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். 

அவரது அவுட் ஆப்கான் முகாமில் புத்துணர்ச்சியை தந்தாலும், இன்னும் ஒரு விக்கெட் வேண்டும் என்கிற ஆவலால் துடித்துக்கொண்டிருந்தனர். சாய்ந்த ஸ்டெம்ப்புகளை சரி செய்ய மைதான ஊழியர்கள் சில மணித்துளிகள் எடுத்துக்கொண்ட நிலையில், அந்த கண நேரத்தில் கச்சிதமான திட்டத்துடன் வந்தனர் ஆப்கான் வீரர்கள். சி.எஸ்.கே-வின் செல்லப் பிள்ளையான டி.ஜே பிராவோ, தனது சொந்த மண்ணில் நடக்கும் தொடரில் தான் ஏன் சிறந்த பந்துவீச்சு பயிற்சியாளர் என்பதை, அந்த இக்கட்டான சூழலில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 

இப்போது ஓரளவுக்கு காற்று ஆப்கான் பக்கம் வீச ஆரம்பித்த நிலையில், பிராவோ ஆட்டத்தை எப்படி முடிக்க வேண்டும் என்கிற திட்டத்தை சொல்லி அனுப்பி வைத்தார். அதை கச்சிதமாக செய்து முடித்து அடுத்த பந்திலே அவுட் எடுத்தார் நவீன்-உல்-ஹக். முடிவில் 17.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்கதேசம் 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அரைஇறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

சிறப்பாக பந்து வீசி அசத்திய ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷீத் கான் மற்றும் நவீன் உல் ஹக் தலா 4 விக்கெட்டுகளையும், ஃபசல்ஹக் பாரூக்கி மற்றும் குல்பாடின் நைப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை ஆப்கானிஸ்தான் வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். தசைப் பிடிப்பால் அவதியுற்ற குல்பாடின் நைப்பை தனது தோளில் சுமந்தபடி பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் மைதானத்தை சுற்றி வந்தார். வீரர்கள் களத்தில் இருந்த ரசிகர்களுடன் வெற்றியைப் பார்கிர்ந்து கொண்டனர். 

அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானின் வெற்றியை சொந்த மண்ணில் இருந்த முக்கிய தெருக்களில் இருந்து போட்டியை கண்டு ரசித்த ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடினர். ஆப்கானிஸ்தானில் உள்ள ரசிகர்கள் தெருக்களில் இறங்கி வெற்றிக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். தற்போது இது தொடர்பான புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Afghanistan Bangladesh T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment