குத்துச்சண்டை பிரிவில் மீண்டும் அதிக எண்ணிக்கையில் வீரர்களை இந்தியா ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப உள்ளது.
அம்மானில் ஆசிய குத்துச் சண்டை தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த வீராங்கனை ஐரிஷ் மாக்னோவை 51 கிலோ எடைப்பிரிவில், 5:0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம், இந்தியாவின் 5 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக் வெண்கல பதக்கத்துக்கு சொந்தக்காரருமான மேரி கோம் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
“இது மேரி கோமின் நம்பமுடியாத சாதனையாகும். அவர் வரலாற்றை மீண்டும் எழுதுகிறார், 2016 ஒலிம்பிக்கில் அவர் தகுதிப் பெறவில்லை. இப்போது அவர் மீண்டும் அவர் தகுதி பெற்றார் என்பது உண்மையில் பாராட்டத்தக்கது. இது பிற குத்துச்சண்டை வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர் தனது இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை வெல்ல முடியும்," என்று இந்தியாவின் உயர் செயல்திறன் இயக்குனர் சாண்டியாகோ நீவா கூறினார்.
அதேபோல், பிலிப்பைன்ஸ் நாட்டுக் குத்துச் சண்டை வீரர் கார்லோ பாலம் என்பவரை காலிறுதிச் சுற்றில் வீழ்த்தி இந்தியக் குத்துச் சண்டை வீரர் அமித் பங்கல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார். ஆசிய சாம்பியன்ஷிப் தங்கம் வென்றவரான அமித் பங்கல் 2018-ல் அரையிறுதியில் இதே பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோ பாலமை தோற்கடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1624-300x166.jpg)
பிறகு 2019 உலக குத்துச் சண்டையில் அரையிறுதிச் சுற்றில் இவரை மீண்டும் ஒருமுறை வீழ்த்தி சாதனை புரிந்தார்.
ஆனால் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியன் சாக்ஷி சவுத்ரி (57 கிலோ), கொரியாவின் இம் ஏஜி என்பவரிடம் தோல்வி தழுவி ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டார். இவர் கொரிய வீராங்கனையிடம் 0-5 என்று தோல்வி தழுவினார்.
இன்னொரு காலிறுதியில் மற்றொரு இந்திய வீரர் மணீஷ் கவுஷிக் (63 கிலோ) மங்கோலியாவின் சின்சோரிக் பாத்தார்சுக் என்பவரை ஒலிம்பிக் தகுதிக்கான போட்டியில் சந்திக்கிறார்.
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு எட்டு வீரர்கள்
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு எட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு முறை இந்தியா 5 வீரர்களுக்கு மேல் அனுப்பவில்லை.
2016 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெறும் 3 குத்துச்சண்டை வீரர்களை மட்டுமே அனுப்பி வைத்தது. மேரி கோம் உட்பட பல முன்னணி வீரர்கள் அந்த முறை ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறத் தவறினர். இந்த நிலையில், மேரி கோம் மீண்டும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தி உள்ளார்.
2020 ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை ஆடவர் பிரிவில் நான்கு பேரும், மகளிர் பிரிவில் நான்கு பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
மேரி கோம், சிம்ரன்ஜித் கவுர் சிங் ஆகியோர் மகளிர் பிரிவில் தேர்வாகி உள்ள முக்கிய வீராங்கனைகள் ஆவர். ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 1 அமித் பங்கால் தகுதி பெற்றுள்ளார். இவர்கள் தவிர ஐந்து வீரர்கள் தேர்வாகி உள்ளனர். இன்னும் இரண்டு வீரர்கள் தகுதி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர்களும் தகுதி பெற்றால் இந்தியா முதன் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு 10 வீரர்களை அனுப்பி வரலாறு படைக்கும்.
இதுகுறித்து சாண்டியாகோ கூறுகையில், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இதுவரை எட்டு குத்துச்சண்டை வீரர்கள் தகுதி பெற்றிருப்பதை பார்ப்பது சிறப்பாக உள்ளது. மேலும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. இது எங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம். ஒலிம்பிக்கிற்கு செல்லும் மிகப்பெரிய அணியாக இதை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம், தகுதிப் பெற்ற இடங்களை பதக்கங்களாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தப்படும்" என்றார்.