worldcup 2023 | england vs afghanistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று டெல்லியில் நடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் பரப்பராக அரங்கேறிய இந்தப் போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை சாய்த்த ஆப்கானிஸ்தானுக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது வெற்றியாகும். இந்த வெற்றியை 8 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் ருசித்துள்ளது.
இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வியைப் பெற்றுள்ள நிலையில், ஜோஸ் பட்லர் தலைமையிலான அந்த அணி தற்போது அரையிறுதி வாய்ப்பில் சிக்கலில் சிக்கியுள்ளது. இதுவரை இங்கிலாந்து விளையாடிய 3 போட்டிகளில் 2ல் தோல்வி கண்டுள்ளது. இதேபோல், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இலங்கை போன்ற அணிகள் இன்னும் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை.
மறுபுறம், தொடரில் 3 போட்டியில் விளையாடி ஒரு தோல்வியைக் கூட பெறாமல் வலம் வரும் இந்தியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பை எளிதாக்கியுள்ளது. இந்த அணிகள் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் தோல்வி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறும். இங்கிலாந்தின் தோல்வி அரையிறுதிக்கு முன்னேறும் போட்டியில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் நல்ல செய்தியாக அமைத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி 10வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளையும் வீழ்த்தி, வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் தாங்களாகவே அதிர்ச்சி தோல்விகளை சந்திக்காமல் இருந்தால், அப்போது 4வது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், இந்தியாவுக்கு எதிரான தோல்வியடைந்த பாகிஸ்தான் ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதனால், அந்த அணி மீதமுள்ள போட்டிகளில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வி பெற்றுள்ள இலங்கை, நெதர்லாந்து அணிகள் புள்ளிகள் பட்டியலில் முன்னேறுவது கடினம். அதேவேளையில், ஆப்கானிஸ்தான் மற்றும் வந்தேச அணிகள் சாதகமான சூழ்நிலையில் அதிக வெற்றிகளைப் பெற முடிந்தால் அரையிறுதி போட்டியாளர்களாக உருவெடுக்கலாம்.
ஒவ்வொரு அணிக்கும் எத்தனை வெற்றிகள் தேவை?
நடப்பு சீசனில் ஒரு அணி அரையிறுதிக்குத் தகுதி பெற குறைந்தபட்சம் 6 வெற்றிகள் தேவை. 7 வெற்றிகளை பெறும் அணிகள் அரையிறுதி இடத்தை உறுதி செய்துவிடும். அந்த வகையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மீதமுள்ள 6 ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற வேண்டும். தென் ஆப்பிரிக்காவுக்கு 4 வெற்றிகள் தேவைப்படும்.
பாகிஸ்தான் அணி மீதமுள்ள 7 போட்டிகளில் 4ல் வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மீதமுள்ள 7 ஆட்டங்களில் 6ல் வெற்றி பெற வேண்டும்.
இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் எஞ்சிய 6 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற வேண்டும். இருப்பினும், நெட் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.