கிரிக்கெட் மைதானத்தில் புகுந்த ஆசாமியை அலேக்காக தூக்கிய ஸ்டார் வீரர்: வீடியோ
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் 'ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்' (Just Stop Oil) அமைப்பை சேர்ந்த 2 போராட்டக்காரர்கள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்குள் புகுந்தனர்.
Ashes 2023: Just Stop Oil protesters disrupt 2nd Test Tamil News: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
Advertisment
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஆஸ்திரேலிய அணி முதல் நாள் மத்திய இடைவேளையின் போது, 23.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அரைசதம் விளாசிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 53 ரன்னுடன் களத்தில் உள்ளார். தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 17 ரன்னில் அவுட் ஆனார்.
இந்த ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் 'ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்' (Just Stop Oil) அமைப்பை சேர்ந்த 2 போராட்டக்காரர்கள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்குள் புகுந்தனர். தங்களின் அமைப்பை வெளிப்படுத்தும் பனியனை அணிந்திருந்த அவர்கள் கையில் வைத்திருந்த பொடியை அள்ளி தூவி, ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்… என்று கோஷமிட்டனர்.
இந்த இருவரில் ஒருவரை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மடக்கிப் பிடித்தார். மற்றொருவரை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பருமான ஜானிபேர் ஸ்டோவ் அலேக்காக தூக்கினார். அதோடு நின்றுவிடாமல் அவரை மைதானத்திற்கு வெளியில் தூக்கி சென்று அங்கிருந்த காவலர்களிடம் ஒப்படைத்தார்.
அந்த 2 போராட்டக்காரர்களும் வீசிய பொடியை மைதான ஊழியர்கள் சுத்தம் செய்தனர். இதனிடையே, பொடி படிந்த ஜெர்சியை மாற்றிக் கொள்ள பேர்ஸ்டோவ் ட்ரெஸ்ஸிங் ரூம் விரைந்தார். இந்த சம்பவத்தால் லார்ட்ஸ் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போட்டி நடப்பதிலும் தாமதமானது.
யார் இந்த 'ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்' அமைப்பினர்?
பிரிட்டனை (யுனைடட் கிங்டம்) தலைமையிலாடமாக கொண்டு செயல்படும் ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்' (Just Stop Oil) அமைப்பினர் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பிரிட்டிஷ் அரசு புதிய எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் லார்ட்ஸ் புதிய புதைபடிவ எரிபொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரும் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இதுகுறித்து ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “கிரிக்கெட் நமது தேசிய பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். ஆனால் கிரிக்கெட் உலகின் பெரும்பகுதி மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாறி வரும் நிலையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியை எப்படி மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்? நாம் விளையாடும் விளையாட்டு, உண்ணும் உணவு, மற்றும் நாம் போற்றும் கலாச்சாரம் ஆகியவை ஆபத்தில் இருக்கும்போது நம்மை நாமே திசை திருப்ப முடியாது.
கிரிக்கெட் ரசிகர்களும், இந்தச் சூழலின் தீவிரத்தைப் புரிந்துகொள்பவர்களும் வீதியில் இறங்கி, சட்ட விரோதமான, குற்றவியல் அரசாங்கத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோர வேண்டிய நேரம் இது. இந்த நெருக்கடியைத் தவிர்க்க ‘நாங்கள் என்ன செய்தோம்’ என்று எங்கள் குழந்தைகள் எங்களிடம் கேட்டால், எங்களிடம் நல்ல பதில் உள்ளது.
ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் அமைப்பினர் இந்த ஆண்டு விளையாட்டு நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிப்பதற்காக பெயரை உருவாக்கியுள்ளனர். இதேபோல் தான், ஏப்ரலில் ஸ்னூக்கர்உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போதும் அவர்கள் இடைமறித்தனர். போராட்டக்காரர் ஒருவர் மேசையின் மீது ஏறி ஆரஞ்சு தூள் பெயிண்ட் பாக்கெட்டை அதன் மீது காலி செய்ததால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது குறிப்பித்தக்கது.