ENG vs IND 1st T20 Highlights Tamil News: இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதிய முதலாவது டி20 ஆட்டம் சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்றிரவு 10.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி பந்துவீசியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரரான கேப்டன் ரோகித் (24 ரன்கள்) அணிக்கு அருமையான தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக, மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷான் 8 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த வீரர்களில் தீபக் ஹூடா (33 ரன்கள்) - சூர்யகுமார் யாதவ் (39 ரன்கள்) ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஹூடாவின் விக்கெட்டுக்கு பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா பவுண்டரி, சிக்ஸர்கள் என மிரட்டல் அடி அடித்தார். அவரது அதிரடி அணியின் ரன் ரேட் மளமளவென உயர உதவியது. தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தால் அவர் அரைசதம் விளாசி 51 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 198 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் மற்றும் மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 199 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில், கேப்டன் ஜோஸ் பட்லர் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் ஸ்விங் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் இருந்த ஜேசன் ராய் மற்றும் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மாலன், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் ஹர்திக் பாண்டியா.
இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதலுக்கு தாக்குபிடிக்காத இங்கிலாந்து அணியினர் தொடர் விக்கெட் சரிவை சந்தித்ததோடு, சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தும் வெளியேறினர். லோ- ஆடரில் விளையாடிய ரீஸ் டோப்லி மற்றும் மேத்யூ பார்கின்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தவே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து அணி 148 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளை விரட்டிய மொயீன் அலி அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்து ஆறுதல் கொடுத்தார். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் அதிரடியான பேட்டிங் மற்றும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
For his brilliant show with the bat and ball, @hardikpandya7 is adjudged Player of the Match as #TeamIndia win the first T20I by 50 runs.
Take a 1-0 lead in the series.
Scorecard - https://t.co/Xq3B0KTRD1 #ENGvIND pic.twitter.com/oEavD7COnZ— BCCI (@BCCI) July 7, 2022
புதிய சாதனை படைத்த கேப்டன் ரோகித்
இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி சர்வதேச டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு, அவரது தலைமையிலான இந்திய அணி ஒரு ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் கூட தோல்வி அடையவில்லை.
🚨 Milestone Alert 🚨
First captain to win 1⃣3⃣ successive T20Is - Congratulations, @ImRo45. 👏 👏#TeamIndia | #ENGvIND pic.twitter.com/izEGfIfFTn— BCCI (@BCCI) July 7, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.