மார்ச் மாதத்துக்கு பிறகு கொரோனா கொடுமையால் எந்தவொரு கிரிக்கெட் போட்டியும் நடைபெறாமல் இருந்தது. டிவி, சமூக வலைத்தளம் என்று எந்த கடையைத் திறந்தாலும், அங்கு விற்கப்படும் சரக்கு கொரோனா மட்டுமே.
குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்கள் கடந்து ஐந்து மாதங்களாக எந்தவொரு ஸ்கோர் அப்டேட்டையும் காண நேரவில்லை. கொரோனா அப்டேட் மட்டுமே. மணிக்கு இத்தனை கி.மீ. வேகத்தில் பந்துவீச்சு என்ற அப்டேட்டுக்கு பதிலாக, ஒருநாளைக்கு இத்தனை விகிதம் வேகத்தில் கொரோனா கேஸ் என்று அப்டேட்டை மட்டுமே காண நேர்ந்தது.
இந்நிலையில், சுமார் ஐந்து மாதங்களுக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் களத்தில் பந்துகள் நாளை (ஜுலை.8) சீறிப்பாய உள்ளன. பேட்-கள், சர்வதேச கிரிக்கெட் பந்துகளை வாஞ்சையுடன் முத்தமிட காத்திருக்கின்றன. காய்ந்து கிடைப்பதால் அதிக டீப் மிட் விக்கெட் முத்தங்களுக்கு வாய்ப்புள்ளது.
எம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்!
ஆம்! கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு, முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் டெஸ்டில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரசிகர்கள் இன்றி, உயிர் பாதுகாப்பு சூழ்நிலையில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை உலகமே உற்று நோக்க இருக்கிறது.
பலம்பொருந்திய அணியாக திகழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 1995-ம் ஆண்டுக்குப்பின் பலவீனம் ஆனது. அதன்பிறகு அணியை எப்படி கட்டமைக்க முயற்சி செய்தாலும் முந்தைய காலம் போன்று ஜொலிக்க முடியவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக இங்கிலாந்தில் மண்ணில் 1988-ம் ஆண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது. அதன்பின் 32 ஆண்டுகளாக தொடரை கைப்பற்றவில்லை.
2017-ல் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது 1-2 எனத் தோல்வியடைந்தது. ஆனால் கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் யாரும் எதிர்பார்க்க வகையில் 2-1 என வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. இந்த நம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்க இருக்கிறது.
இந்த தொடரை வெல்ல ஜாம்பவான் பிரையன் லாரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்தத் தொடர் குறித்து லாரா கூறுகையில் "வெஸ்ட் இண்டீஸ் அணி மிக விரைவாக நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. எப்போதுமே அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
போட்டியை ஐந்து நாட்கள் வரை கொண்டு செல்வார்கள் என்று நினைக்கவில்லை. ஆகவே, நான்கு நாட்களில் முடிக்க விரும்புவார்கள். அவர்கள் முன்னிலைப் பெற்று அதை தக்கவைத்துக் கொள்வார்கள்.
இந்தத் தொடரை உலகமே பார்க்க ஆவலாக உள்ளது. இது போட்டித் தொடராக இருக்கும் என்று ஒவ்வொருவரும் நம்புகிறோம்.
இந்தத் தொடரை வென்றால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏராளமான அர்த்தத்தை ஏற்படுத்தும். தொடரின் முதல் நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியும் என்று காண்பித்தால், அது முக்கிய விஷயமாக இருக்கும்’’ என்றார்.
இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் பார்ப்பது எப்படி?
இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
சவுத்தாம்ப்டனில் உள்ள ஏகாஸ் பவுல் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது.
சோனி நெட்வொர்க் சேனலில் போட்டியை லைவாக காணலாம்.
ஆன்லைனில் SonyLiv App-ல் போட்டியை நேரடியாகக் காணலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.