இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்று 10 நாள் கூட நிறைவடையவில்லை. அதற்குள், சர்வதேச அரங்கில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டம் கண்டு போயிருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 1ம் தேதி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில், அதற்கு முன்பாக இங்கிலாந்து அணி அயர்லாந்துடன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 23.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களில் சுருண்டது.
பர்ன்ஸ் 6 , ஜேசன் ராய் 5, ஜோ டென்லி 23, ஜோ ரூட் 2 என்று வெளியேற, தனது முதல் 7 விக்கெட்டுகளை 43 ரன்களுக்கு தாரை வார்த்தது இங்கிலாந்து. குறிப்பாக, ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, க்றிஸ் வோக்ஸ் ஆகியோர் பூஜ்யத்தில் நடையைக் கட்டினர்.
இறுதிக் கட்டத்தில் சாம் குர்ரன் 18 ரன்களும், ஒலி ஸ்டோன் 19 ரன்களும் எடுத்ததால், இந்த ரன்களையாவது இங்கிலாந்து எட்டியது. இல்லையெனில், 50 ரன்களுக்கே மூட்டையை கட்டியிருக்கும்.
அயர்லாந்தின் வலது கை மீடியம் ஃபாஸ்ட் பவுலர், டிம் முர்டாக் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது வயது 37. 6 அடி 2 அங்குல உயரம் கொண்ட முர்டாக் இங்கிலாந்தின் அஸ்திவாரமான ஓப்பனர்களை காலி செய்து, ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, க்றிஸ் வோக்ஸ் ஆகிய மூவரையும் டக் அவுட்டாக்கி மிரட்டியிருக்கிறார்.
உலகக் கோப்பையை வென்ற அதே இடத்தில், இன்று அயர்லாந்திடம் மரண அடி வாங்கியிருக்கிறது உலக சாம்பியன் இங்கிலாந்து.