இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி:
இந்தியா vs இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நேற்று (2.9.18) தொடங்கியது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களும், இந்திய அணி 273 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.
நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களும் புஜாராவின் அபாரமான சதத்தால் இந்திய அணி 273 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் பட்லர், ஸ்டோக்ஸ், சாம் கரன் ஆகியோரின் ஆபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 271 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக 58 ரன்களும், ரகானே 51 ரன்களும் விளாசினார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 184 ரன்களில் சுருண்டது. மொயின் அலி அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சுனில் கவாஸ்கர்
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றியது.
கவாஸ்கர் கணிப்பு:
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும் முன்பாகவே, இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
” சவுத்தாம்ப்டனில் நான்காம் நாள் ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஆடுகளத்தின் தன்மை இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களான மொயின் அலி மற்றும் அடில் ரஷீத்திற்கு சாதகமாக இருக்கும். எனவே இந்திய வீரர்கள் கவனமாக ஆட வேண்டும்.” என்று கூறியிருந்தார்.
அவரின் கணிப்பின் படி, இந்திய அணி பேட்டிங்கில் வலிமை இழந்து தோல்வியை தழுவியுள்ளது.