இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகளும், 5 டி-20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் கொண்ட தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. சென்னையில் கொரோனா பெருந்தொற்று அச்சம் நீடித்து வருவதால், இரு அணிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை துரிதப்படுத்தி உள்ளதோடு, மூன்று கட்ட கொரோனா பரிசோதனையும் நடக்க உள்ளன. அவர்கள் தங்க வைக்கப்படவுள்ள ஓட்டலில் உயிர் தடுப்பு பாதுகாப்பு முறையை ஓட்டல் முழுவதும் அமல்படுத்த உள்ளன. மற்றும் டெஸ்ட் போட்டியுடன் தொடர்புடைய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் மூன்று கட்ட கோவிட் - 19 சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து அணி நேற்று சென்னை வந்து சேர்ந்தது. சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியபோது இங்கிலாந்து அணி வீரர்களுக்கு முதற் கட்ட கொரோனா சோதனை எடுக்கப்பட்டது. பின்னர் அந்த அணியினர் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்னர்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ள இந்திய அணியும் அதே ஓட்டலில் தான் தங்க வைக்கப்பட உள்ளனர்.
ஜோ ரூட் தலைமையில் தரை இறங்கியுள்ள இங்கிலாந்து டெஸ்ட் அணி, இலங்கையில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் வந்துள்ளது. பிப்ரவரி 5-ம் தேதி நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இரு அணிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் கடந்த ஞாயிற்று கிழமை அன்றே சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.
இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் விராட் கோலி நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தார். ரோகித் சர்மா, அஜின்கியா ரஹானே, ரிஷாப் பந்த், ஜஸ்பிரிட் பும்ரா போன்ற வீரர்கள் நேற்று முன் தினம் வந்து சேர்ந்தனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அணியின் மற்ற வீரர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.
தமிழக அரசு திரையரங்குகளில் 50% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், டெஸ்ட் போட்டி நடக்கும் மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே மைதானம் பூட்டப்பட்ட நிலையிலே டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளது. இது குறித்து பிசிசிஐ-யிடம் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை அளித்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் இந்த தொடரை இந்திய அணிய கைப்பற்றினால், ஐசிசி - யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தரவரிசை பட்டியலில் முதல் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil