Worldcup 2023 | England | Bangladesh: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று காலை 10:30 மணிக்கு இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தொடங்கிய 7வது லீக் போட்டியில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இங்கிலாந்து பேட்டிங்
அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் ஜோடி களமிறங்கிய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை உடைக்க வங்கதேசம் போராடியது. இருவரும் அரைசதம் பதிவு செய்த நிலையில், 51 ரன்கள் எடுத்த ஜானி பேர்ஸ்டோ ஷாகிப் அல் ஹசன் வீசிய 17.5 ஓவரில் போல்ட் -அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகு, தொடக்க வீரர் மாலனுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் டேவிட் மாலன் 91 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஜோ ரூட் 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். சதம் விளாசிய அடுத்த பந்து முதலே மாலன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த 16 பந்துகளில் 40 ரன்கள் வரை குவித்தார். மொத்தமாக 107 பந்துகளில் 16 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 140 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட்-அவுட் ஆனார்.
இதன்பின்னர், ஜோ ரூட் உடன் கேப்டன் பட்லர் ஜோடியில் இணைந்தார். இந்த ஜோடி தொடர்ந்து அதிரடியாக விளையாடியது. ஆனால், பட்லர் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், வங்கதேச அணிக்கு 365 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வங்கதேசம் பேட்டிங்
வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தன்சிட் ஹசன் களமிறங்கினர். லிட்டன் தாஸ் அதிரடியாக ஆட, மறுமுனையில் ஆடிய ஹசன் ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷாண்டோ முதல் பந்திலே டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கி ஷகிப் அல் ஹசன் 1 ரன்னில் வெளியேறினார். இதனால் வங்கதேச அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்த மூன்று விக்கெட்களையும் டோப்லே வீழ்த்தினார்.
அடுத்து வந்த மெஹிதி ஹசன் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக லிட்டன் தாஸ் உடன் முஷ்பிகுர் ரஹ்மான் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்த போராடினர். சிறப்பாக ஆடிய லிட்டன் தாஸ் அரைசதம் அடித்தார்.
இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், லிட்டன் தாஸ் 76 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ஹிர்டோய் களமிறங்கி நிதானமாக விளையாடினார். சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹ்மான் அரைசதம் அடித்தார்.
இருப்பினும் 51 ரன்களில் முஷ்பிகுர் அவுட் ஆனார். அடுத்ததாக மெஹதி ஹசன் களமிறங்கிய சிறிதுநேரத்தில் ஹிர்டோய் 39 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் ஹசன் 14 ரன்களிலும், இஸ்லாம் 12 ரன்களிலும் அவுட் ஆகினர். கடைசியாக தஸ்கின் அகமது 15 ரன்களில் அவுட் ஆக, வங்க தேசம் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
முஷ்தபிஷூர் 3 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 227 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் டோப்லே 4 விக்கெட்களையும், வோக்ஸ் 2 விக்கெட்களையும், சாம் கரண், வுட், ரஷித், லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:-
இங்கிலாந்து
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட், ரீஸ் டாப்லி.
வங்கதேசம்
தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹ்ரிடோய், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.