டி-20 போட்டிகளில் 2000 ரன்கள்... விராட் கோலி படைத்த பிரம்மாண்ட சாதனை!

56 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி மொத்தம் 2,011 ரன்கள் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விரைவாக 2,000 ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணியுடன் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் வருகிறது. கடந்த 3 ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் ட்ராட்போர்ட் மைதானத்தில் நடைப்பெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் அதிகமான பாராட்டுக்கள் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சென்றடைந்தது. குறிப்பாக அவரின் பந்து வீச்சால் இங்கிலாந்து வீரர்கள் திக்கு முக்காடிய தருணம் கிரிக்கெட் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் தான் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சத்தமே இல்லாமல் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக, அயர்லாந்துடன் டி-20 தொடரில் இந்திய அணி விளையாடியது. அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி-20 போட்டியில் 1,983 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனார். 2-ஆவது போட்டியில் 9 ரன்களில் ஆட்டமிழக்க 2,000 ரன்களை அவரால் எட்ட முடியவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது 2,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். டி-20 போட்டிகளில் விரைவாக 2,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 56 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி மொத்தம் 2,011 ரன்கள் எடுத்துள்ளார்.

டி20 போட்டியில் 2 ஆயிரம் ரன்கள் சேர்த்த 4-வது வீரர் என்ற பெருமையுடன் குறைந்த போட்டியில் 2 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர்கள் கப்தில், மெக்கலம், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஆகியோர் மட்டுமே 2 ஆயிரம் ரன்கள் அடித்திருந்த நிலையில், 4-வது வீரராக விராட் கோலி இணைந்தார்.

×Close
×Close