Advertisment

உலகக் கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அபார வெற்றி; கான்வே, ரச்சின் சதம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.

author-image
WebDesk
New Update
England vs New Zealand 1st Match Live Score World Cup 2023 Ahmedabad in tamil

2023 உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

worldcup 2023 | england vs new-zealand: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் இன்று வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் அரங்கேறும் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் முதல்முறையாக தகுதி பெறவில்லை.

Advertisment

இந்த தொடரில் களமாடும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதாவது ரவுண்ட் ராபின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 9 லீக்கில் மோதும். இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்டுவதற்கு 7 வெற்றி தேவை. பல ஆட்டங்கள் மழையால் பாதிக்க வாய்ப்பு இருப்பதால் குறைந்தது 6 வெற்றியாவது பெற வேண்டும்.

இந்நிலையி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து -  நியூசிலாந்து அணிகள்  பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு - இங்கிலாந்து பேட்டிங் 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதன்படி, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் ஜோடியில் டேவிட் மாலன் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த  ஜோ ரூட் உடன் சிறிது நேரம் ஜோடி அமைத்த பேர்ஸ்டோவ் 33 ரன்னில் அவுட் ஆனார். ஹாரி புரூக் 25 ரன்னிலும், மொயின் அலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடி வரும் ஜோ ரூட் 57 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவருடன் ஜோடி அமைத்த ஜோஸ் பட்லர் சிறிது தாக்குப் பிடித்து  சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார். 42 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்லர் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் வந்த லியாம் லிவிங்ஸ்டோன் ஜோ ரூட் உடன் ஜோடி சேர்ந்தார். 3 பவுண்டரிகளை விரட்டிய லிவிங்ஸ்டோன் 20 ரன்னில் அவுட் ஆனார்.  அரைசதம் சதம் விளாசி தனி ஒருவனாக போராடி வந்த ரூட் 86 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் 11 ரன்னிலும், சாம் கர்ரன் 14 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

அடில் ரஷித் 15 ரன்னுடனும், மார்க் வூட் 13 ரன்னுடனும் கடைசில் களத்தில் இருந்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 282 ரன்கள் எடுத்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 283 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

தொடர்ந்து 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய வில் யங் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திர தொடக்க விரர் கான்வேயுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இருவரும் ஒருவர் பின் ஒருவராக அரைசதம் கடந்து அசத்தினர். 

தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 83 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். மறுபுறம் கான்வேக்கு சமமாக அதிரடியில் அசத்திய ரச்சின் ரவீந்தர் 82 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். இந்த கூட்டணியை பிரிக்க இங்கிலாந்து அணி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், அதிரடியாக விளையாடிய கான்வே 150 ரன்களை கடந்து அசத்தினார். 

இறுதியில் 36.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கடந்த 2019 உலககோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் சந்தித்த தோல்விக்கு நியூசிலாந்து பழி தீர்த்துள்ளது. மேலும் 2023 உலககோப்பையின் முதல் போட்டியை நியூசிலாந்து தற்போது வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

தொடக்க வீரராக களமிறங்கிய கடைசி வரை களத்தில் இருந்து டெவான் கான்வே 131 பந்துகளில் 19 பவுண்டரி 3 சிக்சருடன் 151 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் 11 பவுணட்ரி 5 சிக்சருடன் 123 ரன்கள் குவித்து களத்தில் இருந்தனர். 

இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்: 

இங்கிலாந்து: 

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்

நியூசிலாந்து: 

டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, டிரென்ட் போல்ட்.

நேருக்கு நேர் 

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இதுவரை 95 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 44-ல் வெற்றி பெற்றன. 3 ஆட்டம் சமன் ஆனது. 4 ஆட்டத்தில் முடிவில்லை.

உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் 10 முறை மோதியுள்ளன. இதில் 5-ல் நியூசிலாந்தும், 4-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டன. மற்றொரு ஆட்டம் சமன் ஆனது.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

England Worldcup New Zealand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment