England vs New Zealand Test series Tamil News: இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நேற்று முதல் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி லண்டன் நகரின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அறிமுக தொடக்க வீரர் டேவான் கான்வே 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அறிமுகமான முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ள டேவான் கான்வே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 25 ஆண்டு கால சாதனையை முறியடிதுள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 6 வீரர்கள் தாங்கள் அறிமுகமாகிய முதல் போட்டியிலே சதம் அடித்து அசத்தியுள்ளனர். இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அதிக ரன்களை குவித்த வீரராக வலம் வந்தார். கடந்த 1996ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கங்குலி, அந்த போட்டியில் 136 ரன்கள் குவித்திருந்தார். இதுவே இதுவரை அந்த மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.
இந்நிலையில், 25 ஆண்டுகள் கழித்து கங்குலியின் இந்த சாதனையை நியூசிலாந்தின் டேவான் கான்வே நேற்று முறியடித்துள்ளார். இதில் சுவாரஷ்யமான விஷயம் என்னவென்றால் இந்த இரு வீரர்களும் (ஜூலை 8) ஒரே நாளில் தங்கள் பிறந்தநாளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இதுவரை 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டேவான் கான்வே 473 ரன்களை குவித்துள்ளார். மேலும் 3 ஒரு நாள் போட்டிகளில் 225 ரன்கள் அடித்து சிறப்பான சராசரி வைத்துள்ளார். தற்போது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ள இவர், தனது முதல் போட்டியிலே சதம் அடித்து உலக கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“