/indian-express-tamil/media/media_files/2025/03/01/19hS9R2LP6SJOeb32ERe.jpg)
தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து, லைவ் கிரிக்கெட் ஸ்கோர், சாம்பியன்ஸ் டிராபி 2025
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சி தேசிய மைதானத்தில் அரங்கேறும் 11-வது லீக் போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, அந்த அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - பென் டக்கெட் ஜோடி களம் புகுந்தனர். இங்கிலாந்துக்கு அதிரடி தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில், பிலிப் சால்ட் 8 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஜேமி ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு களமிறங்கிய ஜோ ரூட் தொடக்க வீரர் பென் டக்கெட் உடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி அடுத்த 4 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப்பிடித்தது. 4 பவுண்டரியை விரட்டிய பென் டக்கெட் 24 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த ஹாரி புரூக் 19 ரன்னுக்கும அவுட் ஆகி வெளியேற களத்தில் இருந்த ஜோ ரூட் 37 ரன்னில் அவுட் ஆனார்.
இதன்பின்னர் வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 9 ரன்னுக்கும், ஜேமி ஓவர்டன் 11 ரன்னுக்கும் அவுட் ஆகி வெளியேறினர். தென் ஆப்ரிக்காவின் மார்கோ ஜான்சன் மற்றும் கேசவ் மகாராஜ் மாறி மாறி இங்கிலாந்து விக்கெட்டை வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இதன்பிறகு களத்தில் இருந்த ஜோஸ் பட்லர் - ஜோஃப்ரா ஆர்ச்சர் ஜோடியில், 4 பவுண்டரியை விரட்டிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 ரன்னில் அவுட் ஆனார். தனி ஒருவவனாக போராடி வந்த கேப்டன் பட்லர் 21 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அடில் ரஷித் 2 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறவே, இங்கிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
38.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. இதனால், தென் ஆப்ரிக்க அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்க அணி தரப்பில் பவுலிங்கில் மிரட்டி எடுத்த மார்கோ ஜான்சன், வியான் முல்டர் தலா 3 விக்கெட்டையும், கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டையும், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.
தொடர்ந்து 180 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில், தொடக்க வீரர் ஸ்டப்ஸ் ரன் கணக்கை தொடங்காமலே பெவிலியன் திரும்பினாலும் 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய வான்டர் டூசன், தொடக்க வீரர் ரிக்கெல்டனுடன் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்தபோது, ரிக்கெல்டன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த க்ளாசன் அதிரடியாக விளையாடி அசத்தினார்.
மறுமுனையில், அரைசதம் கடந்த வான்டர் டூசன் அணியை வெற்றியை நோக்கி முன்னேற்றிய நிலையில், அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த க்ளாசன், 56 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 29.1 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய தென்ஆப்பிரிக்க, அணி பி பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது. 3 லீக் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இங்கிலாந்து: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத்.
தென் ஆப்பிரிக்கா: டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி
ஆங்கிலத்தில் படிக்கவும்: South Africa vs England LIVE Cricket Score, Champions Trophy 2025
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் டிராபியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. வங்கதேசம் பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
மறுபுறம், 'பி' பிரிவில் இங்கிலாந்து அரையிறுதிக்கு வாய்ப்பை இழந்து விட்டது. அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா மட்டும் தகுதி பெற்றுள்ளது. இதனால், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.