worldcup 2023 | England Cricket Team: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கும் 20வது லீக் போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: England vs South Africa World Cup 2023 Live Score:
டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் - தென் ஆப்பிரிக்கா பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதனால், தென் ஆப்ரிக்கா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய டி காக் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் களத்தில் இருந்த ஹென்ட்ரிக்ஸ் உடன் சிறப்பான ஜோடியை அமைத்தார். இந்த ஜோடியில் இருவரும் அரைசதம் அடித்து இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.
61 பந்துகளில் 8 பவுண்டரிகளை விரட்டிய ராஸ்ஸி வான் டெர் டுசென் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடியில் இருந்த ரீசா ஹென்ட்ரிக்ஸ் 75 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 4 பவுண்டரியை விரட்டிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். மில்லர் 5 ரன்னுக்கு நடையைக் கட்டினார்.
அடுத்து வந்த மார்கோ ஜான்சன் ஹென்ரிச் கிளாசென் உடன் ஜோடி சேர்ந்தார். 40 ஓவர்கள் வரை அதிரடி கலந்த நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோடி அதற்கு மேல் மிரட்டல் அடி அடித்தனர். இருவரும் மாறி மாறி சிக்ஸர் மழை பொழிந்தனர். ஹென்ரிச் கிளாசென் 61 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். 67 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் கிளாசென் 109 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜெரால்ட் கோட்ஸி 3 ரன்னுக்கு அவுட் ஆனார். கடைசி வரை களத்தில் இருந்த மார்கோ ஜான்சன் 42 பந்துகளில் 3பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு தென் ஆப்பிரிக்க அணி 399 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 400 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திணறிய இங்கிலாந்து
தொடர்ந்து 400 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் மலான் 6 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ 10 ரன்களிலும், ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த ஜோ ரூட் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனால் 24 ரன்களுக்குள் முதல் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி அதன்பிறகு சரிவில் இருந்து மீளவே இல்லை.
தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோக்ஸ் 5 ரன்களிலும், சிறிது நேரம் தாக்குபிடித்த ஹாரி புரூக் 17 ரன்களும், கேப்டன் பட்லர் 15 ரன்களுக்கும் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 12 ஓவர்களில் 68 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதனைத் தொடர்ந்து டேவிட் வில்லி 12 ரன்களுக்கும், ஆடல் ரஷித் 10 ரன்களுக்கும், வெளியேறிய நிலையில், 100 ரன்களை கடந்த இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதன்பிறகு 9-வது விக்கெட்டுக்கு இணைந்த அட்கின்சன் மார்க் வுட் ஜோடி கடைசிகட்டத்தில் போராடியது. இருவரும் வந்தவரை லாபம் என அதிரடியில் இறங்கியதால், இங்கிலாந்து அணி சற்று தலை நிமிர்ந்தது. இதில குறிப்பாக ரபாடா வீசிய 21 ஓவரின் முதல் பந்தில் மார்க் வுட் 2 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 5 பந்துகளை சந்தித்த அட்கின்சன் 4 பவுண்டரிகள் விளாசி அசத்தினார். இதனால் இஙிலாந்து அணியின் ரன் வேகம் அதிகரித்தது.
இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 33 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்த நிலையில், அட்கின்சன் 21 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு காயம் காரணமாக ரிசி டோப்ளி களமிறங்காத நிலையில், 9-வது விக்கெட் வீழந்தவுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 22 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசிவரை களத்தில் இருந்த மார்க் வுட் 17 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 43 ரன்கள் குவித்தார். இந்த போட்டியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகளுடன் 9-வது இடத்திலும் உள்ளது.
தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி.
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டேவிட் வில்லி, அடில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ரீஸ் டாப்லி
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த தோல்வி இருந்து மீள 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வதம் செய்தது. எனினும், முந்தைய ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.
தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவான அணியாக வலம் வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இலங்கை, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அந்த அணி யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மழையால் பாதித்து 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இப்படி கடைசியாக நடந்த போட்டிகளில் தோல்வி கண்ட இந்த இரு அணிகளும் தோல்வியில் இருந்து மீண்டு வர கடுமையாக போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
மும்பை ஆடுகளம் எப்படி?
நடப்பு உலகக் கோப்பை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் ஆட்டம் இதுவாகும். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் இரு அணி பேட்ஸ்மேன்களும் ரன்வேட்டை நடத்த வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.