worldcup 2023| england vs srilanka: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: England vs Sri Lanka Live Score, World Cup 2023
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மலான் ஜோடி களமிறங்கிய நிலையில், 6 பவுண்டரிகளை விரட்டிய டேவிட் மலான் ஏஞ்சலோ மேத்யூஸ் வீசிய 6.3 ஓவரில் கீப்பர் குசல் மெண்டிஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜோ ரூட் 3 ரன் மட்டுமே எடுத்த நிலையில், ரன்-அவுட் ஆகி வெளியேறினார். இதன்பின்னர் களம் புகுந்த பென் ஸ்டோக்ஸ் களத்தில் இருந்த ஜானி பேர்ஸ்டோவ் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சில ஓவர்கள் நிதானம் காட்டினர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பட்லர் ஒரு பவுண்டரியை துரத்தி 8 ரன்கள் எடுத்த நிலையில், லஹிரு குமார வீசிய 14.5 வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த லியாம் லிவிங்ஸ்டோன் (1 ரன்) லஹிரு குமார வீசிய அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.
களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் - மொயின் அலி ஜோடி சில ஓவர்கள் விக்கெட் சரிவை மீட்டு நிதானமாக விளையாடி வந்தனர். இந்த ஜோடியில் மொயின் அலி 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் டக்-அவுட் ஆகி வெளியேறினார். நீண்ட நேரம் களத்தில் தாக்குபிடித்த ஸ்டோக்ஸ் 43 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இதன்பிறகு வந்து 2 ரன் எடுத்த அடில் ரஷித் ரன்-அவுட் ஆனார். மார்க் வுட் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 33.2 ஓவரர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 156 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், இலங்கை அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கசுன் ராஜித தலா 2 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை பேட்டிங்
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷங்கா மற்றும் குசல் பெரேரா களம் இறங்கினர். குசல் பெரேரா 4 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 11 ரன்களில் அவுட் ஆனார். இருவரது விக்கெட்டையும் வில்லி வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து நிஷங்காவுடன் சதீரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இலங்கை அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி நிஷங்கா அரைசதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலே சதீராவும் அரைசதம் அடித்தார். நிஷங்கா 77 ரன்கள் மற்றும் சதீரா 65 ரன்கள் எடுத்திருந்தப்போது இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது.
இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் வில்லி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:
இலங்கை:
பாத்தும் நிசாங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க.
இங்கிலாந்து:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வுட்
ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் (வங்கதேசம்) மட்டுமே வென்றுள்ளது. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளிடம் அடி வாங்கி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இலங்கையும் இதே நிலைமையில் தான் சிக்கித் தவிக்கிறது. தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் வரிசையாக தோல்வி அடைந்த இலங்கை கடந்த ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
தலா 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7 மற்றும் 8வது இடத்தில் உள்ள இந்த அணிகள் மீதமுள்ள 5 போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும். இதில் ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இவ்விரு அணிகள் மோதும் இன்றையப் போட்டி வாழ்வா - சாவா? போட்டியாக பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
இங்கிலாந்து - இலங்கை அணிகள் இதுவரை உலகக்கோப்பையில் 11 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் 6-ல் இங்கிலாந்தும், 5-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஆனாலும் 1999-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் இலங்கை தோற்றதில்லை. அதன் பிறகு சந்தித்த 4 முறையும் இலங்கை அணியே வென்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“