தோனியை கவுரவிக்கும் வகையில் 7 ரூபாய் நாணயம் வெளியிடப்பட இருப்பதாக குறிப்பிடும் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மையை நியூஸ்மீட்டர் இணைய தளம் சார்பார்த்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டனாக எம்.எஸ் தோனி திகழ்கிறார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என கோப்பைகளை வாங்கிக் குவித்தது. மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 3 ஃபார்மெட்டுகளிலும் கொடி கட்டி பறந்தது.
ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்திய தோனி, அந்த அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூட உதவினார். அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
பி.சி.சி.ஐ. ஐ.பி.எல் 2025 தொடருக்கான புதிய ஏல விதிமுறைகளை வெளியிட்ட நிலையில், அதில் அன்கேப்ட் வீரர் என்ற பழைய விதிமுறையை பி.சி.சி.ஐ. மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்த விதியை பயன்படுத்தி சென்னை அணி தோனியை அணிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டத்துக்கு தோனி இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. அது நடந்து விட்டால், தோனி மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்த தயாராகி விடுவார்.
இந்நிலையில், இந்திய ஜாம்பவான் வீரரான தோனி, கடந்த ஆகஸ்ட் 15, 2020-ல் சர்வதேச கிரி்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி செய்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் '7'-க்கு கடந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஓய்வு அளித்தது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமைத்துவத்திற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) ரூ.7 நாணயத்தை வெளியிட உள்ளதாக சமீபத்தில் வெளியான தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவரது படத்துடன் கூடிய நாணயம் வெளியிடப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.
தோனியின் படம் இருக்கும் நாணயத்தின் புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்த ஒரு பயனர், “ஆர்.பி.ஐ மகேந்திர சிங் தோனியின் நினைவாக புதிய 7 ரூபாய் நாணயத்தை வெளியிடும்; 'தல' மீண்டும் ஒருமுறை ஜொலிக்க இருக்கிறார். அதற்கு இதுதான் காரணம்." என்று குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.
உண்மை சரிபார்ப்பு
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி அத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், அது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் உண்மை சரிபார்ப்பு இணைய பக்கமான நியூஸ்மீட்டர் கூறியுள்ளது.
நியூஸ்மீட்டர் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை மதிப்பாய்வு செய்வதன் மூலம் நாங்கள் எங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அப்போது, எம்.எஸ் தோனியின் நினைவாக ரூ. 7 நாணயங்களை வெளியிடுவது குறித்து எந்த வெளியீட்டையும் காணவில்லை. இணையதளத்தின் செய்தி வெளியீட்டுப் பகுதியையும் ஆய்வு செய்த நிலையில், இது தொடர்பாக நவம்பர் 14 முதல் அத்தகைய அறிவிப்பு எதுவும் இல்லை. மேலும், ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் பட்டியலைச் சரிபார்க்கையில் 7 ரூபாய் நாணயத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) இணையதளத்தில் நினைவு நாணயங்களின் பட்டியலையும் மதிப்பாய்வு செய்தோம். குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், ஆளுமைகள், ஆண்டுவிழாக்கள் அல்லது மைல்கற்கள் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்காக நினைவு நாணயங்கள் வெளியிடப்படுகின்றன, மேலும் அவை பெரும்பாலும் தனித்துவமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன, அவை அதிக அளவில் சேகரிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்தப் பட்டியலில் எம்எஸ் தோனியின் நினைவாக வெளியிடப்பட்ட ரூ. 7 நாணயம் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.
இந்த புகைப்படத்தை கொண்டு ரிவர்ஸ் இமேஜ் தேடலை மேற்கொண்டபோது, எம்.எஸ். தோனியின் நாணயங்கள் முதலில் நவம்பர் 3 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தத்யாவால் வெளியிடப்பட்டதைக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பதிவில், தோனியைக் கௌரவிப்பதற்காக ரிசர்வ் வங்கி இந்த நாணயத்தை வெளியிடுவதாக கூறப்பட்டது. எவ்வாறாயினும், அந்தப் பதிவின் முடிவில்,கேலிக்காகவும், முற்றிலும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.
நவம்பர் 14 அன்று, பத்திரிகை தகவல் பணியகம் (பி.ஐ.பி) அதன் உண்மை சரிபார்ப்பில், 7 ரூபாய் நாணயம் என்று கூறப்படும் நாணயத்தின் வைரலான படத்தை வெளியிட்டது. அது போலியானது என்பதையும் தெளிவுபடுத்தியது. இந்திய கிரிக்கெட்டுக்கு எம்.எஸ் தோனியின் பங்களிப்புக்காக பொருளாதார விவகாரங்கள் துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
An image circulating on social media claims that a new ₹7 coin will be released to honor Mahendra Singh Dhoni for his contributions to Indian Cricket.#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) November 14, 2024
✔️ The claim made in the image is #fake.
✔️ The Department of Economic Affairs has made NO such announcement. pic.twitter.com/rgFwmVUPbL
எனவே, இந்திய கிரிக்கெட்டுக்கு எம்.எஸ் தோனியின் பங்களிப்புக்காக ரிசர்வ் வங்கி 7 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது என்கிற கூற்று தவறானது என்று நியூஸ்மீட்டர் முடிவு செய்துள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.