இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பெண்களுடன் நடமாடுவதாக குறிப்பிட்டு இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து இருக்கிறது நியூஸ்மீட்டர் இணையதளம்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கடந்த 1992 ஆம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், 800 டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றிய பிறகு 2010 ஆம் ஆண்டில் தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார். இதேபோல், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
முத்தையா முரளிதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 800 விக்கெட்டுகளையும், 350 ஒருநாள் போட்டிகளில் ஆடி 534 விக்கெட்டுகளையும், 12 டி20 போட்டியில் இருந்து 13 விக்கெட்டையும், 66 ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து 63 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தி இருக்கிறார். மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஏராளமான சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.
ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரரான முத்தையா முரளிதரன், பெண்களுடன் நடமாடுவதாக குறிப்பிட்டு இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில், இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து இருக்கிறது நியூஸ்மீட்டர் இணையதளம்.
உண்மை சரிபார்ப்பு
முதலில் முத்தையா முரளிதரன் இவ்வாறு நடனம் ஆடினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறான எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இரண்டு வீடியோக்களையும் தனித்தனியே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, வைரலாகும் இரண்டு வீடியோக்களையும் கிரண் ஜோபலே (Kiran Jopale) என்ற நடனக் கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இன்ஸ்டாகிராம் நடனக் கலைஞரின் தோற்றமும், முத்தையா முரளிதரனின் தோற்றமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் இவரை முத்தையா முரளிதரன் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை கண்டறிந்துள்ளனர்.
இந்தத் தேடலின் முடிவில், பெண்களுடன் சேர்ந்து நடனமாடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என்று வைரலாகும் வீடியோவில் இருப்பவர் நடனக் கலைஞரான கிரண் ஜோபலே என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/fact-check--739412
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.