ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், டூ பிளசிஸ், மில்லரின் அபார சாகச கேட்ச்சால், தென் ஆப்பிரிக்க அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது.
இரண்டாவது போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடி வந்தது. ஒருகட்டத்தில் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆஸ்திரேலிய அணி வந்தது.
மிட்செல் தொடர்ந்து சொதப்பிவந்த நிலையில், நிதானித்த மிட்செல், பந்தை உள்வாங்கி சிக்சருக்கு விரட்ட முயன்றார். பவுண்டரி எல்லையில், டூபிளசிஸ் நின்றிருந்தார். அவர் பந்தை கேட்ச் பிடித்தார். தான் பவுண்டரி எல்லையை தொடப்போவதாக நினைத்தாரோ என்னவோ, பந்தை தட்டிவிட்டார். மில்லர் விரைந்துவந்து அந்த பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார்.
டூபிளசிஸ், மில்லரின் இந்த அசகாய கேட்ச், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிப்போக்கை திசைமாற்றி விட்டது.
ஆஸ்திரேலிய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. தொடரை யார் வெல்லப்போகிறார்கள் என்பதை 26ம் தேதி நடைபெற உள்ள மூன்றாவது போட்டியே நிர்ணயிக்கும் என்பதால்,ரசிகர்கள் மிகுந்த பரபரப்பில் உள்ளனர்.