சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக கலக்கிவரும் மதிஷா பதிரானாவின் புகைப்படத்தை போட்டு அவர் விதிகளுக்கு உட்பட்ட கோணத்தில் இருந்து கீழ் பந்து வீசுவதாக ரசிகர் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.
2023-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரைக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐ.பி.எல் தொடரிலும் பலம் வாய்ந்த அணியாக விளையாடி வருகிறது. கடந்த முறை சி.எஸ்.கே அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல இலங்கை அணியின் மதிஷா பதிரானா முக்கியப் பங்கு வகித்தார். கடந்த ஐ.பி.எல் சீசனில் 12 போட்டிகளில் விளையாடிய பதிரானா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார்.
மதிஷா பதிரானா இந்த ஐ.பி.எல் சீசனில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். மலிங்கா போல் வித்தியாசமாகப் பந்துவீசும் பதிரானா, சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரராக உள்ளார். அதே நேரத்தில், தோனியின் நம்பிக்கையைப் பெற்றவராக வலம் வருகிறார்.
இந்நிலையில், மதீஷா பதிரானா ஐ.சி.சி விதிகளை மீறி கையை வளைத்து பந்து வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் மதிஷா பதிரானாவின் புகைப்படத்தை போட்டு அவர் விதிகளுக்கு உட்பட்ட கோணத்தில் இருந்து கீழ் பந்து வீசுவதாக கூறி குற்றஞ்சாட்டி இருக்கிறார். இதன் மூலம் பதிரானா மீது தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பதிரானா பந்தை எறிவதாக ரசிகர் ஒருவரின் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், பதிரானாவிற்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக எந்த ஒரு அணியின் பேட்ஸ்மேன்களும் அதிகாரப்பூர்வமாக ஐ.பி.எல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கவில்லை.
ஒருவேளை, ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் பதிரானா பந்தை எறிவதாக புகார் அளித்தால், பதிரானா தன்னுடைய பந்துவீச்சு முறையை விதிகளுக்கு உட்பட்டு தான் வீசுகிறேன் என்று நிரூபிக்க வேண்டும். அதுவரை பதிரானாவால் பந்து வீச முடியாத நிலை ஏற்படலாம். ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை புகார் எதுவும் அளிக்கப்படாததால் சி.எஸ்.கே அணிக்கு சிக்கல் இல்லை.
இருப்பினும், பதிராணா உண்மையிலேயே பந்தை எறிகிறாரா என்று சிஎஸ்கே அணி பரிசோதனை செய்ய வேண்டும் என்று ரசிகர்களும் வலியுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில், பதிரானா மீது வேண்டும் என்றே சிலர் இப்படி குற்றம் சாட்டுகிறார்கள் என்று சி.எஸ்.கே ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒருவேளை பதிரானா தவறான முறையில் பந்து வீசி இருந்தால் நடுவரே அதை எச்சரித்து இருப்பார் சி.எஸ்.கே வரிந்து கட்டிக்கொண்டு பதிலடி கொடுத்துள்ளார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“