கிரிக்கெட் 'வில்ஸ்' என்று அழைக்கப்பட்ட காலத்திற்கே மீண்டும் திரும்புகிறதா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.
நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில், மும்பை - பீஹார் அணிகள் இடையிலான ஆட்டத்தில், ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது தடுப்பு வேலியைத் தாண்டி குதித்து கிரவுண்டிற்குள் வந்த ரசிகர் ஒருவர், ரோஹித் ஷர்மாவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து, காலில் விழுந்து சென்றிருக்கிறார்.
இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போதும், ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி, மைதானத்திற்குள் வந்து கேப்டன் விராட் கோலியுடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.
பொதுவாக, தங்களின் ஹீரோக்களான கிரிக்கெட் வீரர்கள் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான காதலால், ரசிகர்கள் இவ்வாறாக நடந்து கொள்வதை நாம் அவ்வப்போது காண நேரிடும்.
உதாரணமாக சச்சின், தோனி ஆகிய இருவரும் அதிகம் இதுபோன்ற சுகமான சிக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இதில் மோசமான ஆபத்துகள் ஒளிந்திருக்கிறது என்பதே உண்மை!. ரோஹித் ஷர்மாவை நோக்கி ஓடி வந்த அந்த ரசிகர் நினைத்திருந்தால் அவரை என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும்.
அதுவாவது உள்ளூர் போட்டி. கோலி விளையாடியது சர்வதேச போட்டி. அங்கே பாதுகாப்பு இவ்வளவு குளறுபடியாக அமைந்ததை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை.
இதனை வெறும் ரசிகர்களின் அன்பு என்று சொல்லி கடந்துவிட முடியாது. பொதுவாக உள்ளூர் போட்டிகள் சாதாரண பாதுகாப்புடனே நடக்கிறது. இந்த சம்பவத்திற்கு பிறகாவது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
விளையாட்டு தானே! என்று எடுத்துக் கொண்டால் சீரியஸான நிகழ்வை ஒருநாள் எதிர்கொள்ள நேரிடும். அது வீரர்களுக்கும் நல்லதல்ல.. விளையாட்டுக்கும் நல்லதல்ல.