மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக அந்த அணியின் சொந்த மண்ணில், மும்பை வான்கடே மைதானத்தில் அதிலும் மும்பை அணி ரசிகர்களே கோஷம் எழுப்பியது அந்த அணியின் நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஐ.பி.எல் போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டை வேறு ஒரு உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது என்று கூறினால், அது மிகையல்ல. ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 அணிகள்தான் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5 முறை ஐ.பி.எல் கோப்பைகளை வென்று சமநிலையில் உள்ளன. இதனால், மும்பை அணி 6-வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன் அணியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டது.
அந்த வகையில், குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வரப்படார். ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமனம் செய்யப்பட்டார். இது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், மும்பை அணிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் எதிராக மும்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தான், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஐ.பி.எல் தொடரில் பின்னடைவை சந்தித்தார். ஹர்திக் பாண்டியாவின் சொந்த மண்ணில் அகமதாபாத்தில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியது ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்தில் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இதனால், மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினால், ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவான குரல்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன் டாஸ் போட ஹர்திக் பாண்டியா வந்த போதே ரோஹித் சர்மா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள். அதேபோல, தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கிய போது, ‘ரோஹித்.. ரோஹித்.. ரோஹித்’ என்று அரங்கம் அதிர கோஷமிட்டார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார்.
சொந்த மண்ணிலேயே மும்பை அணி கேப்டனுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக இப்படி ஒரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. போதாத குறைக்கு, மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தோல்வி அடைந்ததன் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இதே போல, இதற்கு முன்னர், கே.கே.ஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கே.கே.ஆர் அணி நிர்வாகத்திற்கு கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.