Ipl-2024-auction: 10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) துபாயில் நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 119 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருந்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் ஏலம் போனார்கள். இவர்கள் மொத்தம் ரூ.230 கோடியே 45 லட்சத்திற்கு விற்கப்பட்டனர். இந்த மினி ஏலத்தில் 30 வெளிநாட்டு வீரர்கள் தேவைப்பட்ட நிலையில், அதில் அதிகளவில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த வீரர்கள் வாங்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் (ரூ. 24.75 கோடி கொல்கத்தா அணி) பேட் கம்மின்ஸ் (ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணி) ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய வீரர்கள். இதேபோல், ஐதராபாத் அணியால் ரூ.6.8 கோடிக்கு வாங்கப்பட்ட டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய வீரர் ஆவார்.
இந்த வரிசையில் ஆஸ்திரேலியா அணியின் ஆஷ்டன் டர்னரை லக்னோ அணி ரூ.1 கோடிக்கும், ஸ்பென்சர் ஜான்சன் ரூ.10 கோடிக்கு குஜராத் அணியாலும், ஜை ரிச்சர்ட்சன் ரூ.5 கோடிக்கு டெல்லி அணியாலும் ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டனர். ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த வீரர்களை மட்டும் சுமார் ரூ.68.05 கோடிக்கு ஐ.பி.எல் அணிகள் வாங்கியுள்ளது
இதற்கு மிக முக்கிய காரணமாக, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் ஐ.பி.எல் அணிகளின் பயிற்சியாளர்களாக இருப்பது தான் என்று பார்க்கப்படுகிறது. டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங், ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் விட்டோரி (ஆஸ்திரேலியா ஸ்பின் ஆலோசகர்), லக்னோ அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வகையில் பேட் கம்மின்ஸை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள் இருக்கும் அணிகளிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐதராபாத் அணிக்கு பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவருமே தேவைப்படாத சூழலில், இருவரையும் வாங்கும் முடிவை விட்டோரி எடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
இதேபோல் ஜஸ்டிங் லாங்கர் எந்த காரணத்திற்காக ஆஷ்டன் டர்னரை வாங்கினார் என்பது இப்போது வரை புரியாத புதிராக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். குஜராத் அணி ஸ்பென்சர் ஜான்சனை ரூ.10 கோடிக்கு வாங்க டெல்லி உடனான போட்டி காரணம் என்றும், ஜை ரிச்சர்ட்சனுக்கு ரூ.5 கோடி கொடுத்து வாங்கும் தேவை டெல்லி அணிக்கு இல்லை, அங்கு ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் விளையாடி வருகிறார் என்றும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
இதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ரச்சின் ரவீந்திரா (ரூ. 1.8 கோடி) மற்றும் டேரில் மிட்செல் (ரூ. 14 கோடி) ஆகியோரை வாங்கினார். ஏற்கனவே நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே (1 கோடி) மற்றும் மிட்செல் சான்ட்னர் (1.9 கோடி) சென்னை அணியில் இடம் பிடித்துள்ள நிலையில், இன்னும் 2 நியூசிலாந்து வீரர்களை சென்னை அணி வாங்கி இருப்பதை 'குட்டி நியூசிலாந்து போல் சி.எஸ்.கே' உள்ளது என ரசிகர்கள் கலாய்க்கும் வகையில் அமைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.