இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் காலை 9:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இதன்படி, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சார்பில் களமாடிய டாப் ஆடர் வீரர்களான கேப்டன் ரோகித் (6 ரன்), சுப்மன் கில் (0), விராட் கோலி (6 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் (39 ரன்), கே.எல் ராகுல் (16 ரன்) நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி அவுட் ஆகினர். இதனால், இந்திய அணி 144 ரன்னுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வந்தனர். இந்த இக்கட்டான சூழலில் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த அஸ்வின் - ஜடேஜா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின், 6வது டெஸ்ட் சதம் விளாசி அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் 102 ரன்களும், ஜடேஜா 86 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து நாளைய ஆட்டத்திலும் இந்த ஜோடி கலக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து மிரட்டிய ஆல்ரவுண்டர் வீரர் அஸ்வினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
இந்திய அணிக்காக அஸ்வின் மற்றும் ஜடேஜா சிறப்பான மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், போட்டி முடிந்து பெவிலியனுக்கு திரும்பிய இந்த ஜோடி இந்திய அணி வீரர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினர். இது தொடர்பான புகைப்படத்தை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி சர்வதேச டெஸ்ட் அரங்கில் 6 சதங்களை பதிவு செய்துள்ளார். அவரின் சாதனையை அஸ்வின் தனது சதம் மூலம் சமன் செய்துள்ளார். மேலும், இந்திய அணி தரப்பில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 6 சதம் அடித்த ஒரே சுழற்பந்துவீச்சாளர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
"அஸ்வினும் ஜடேஜாவும் என்னவொரு அற்புதமான பார்ட்னர்ஷிப். அஸ்வின் தனது 6வது டெஸ்ட் சதத்தை எடுத்தது மிகவும் சிறப்பான சாதனையாகும்." இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“