IPL 2024 | Sunrisers Hyderabad vs Lucknow Super Giants: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று புதன்கிழமை ஐதராபாத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் படோனி 55 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 48 ரன்களும் எடுத்தனர். இந்த இலக்கை துரத்திய ஐதராபாத் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 9.4 ஓவரிலே எட்டிப் பிடித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் லக்னோ பந்துவீச்சை தும்சம் செய்து அணியின் வெற்றிக்கு உதவினர். 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், 28 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் அபிஷேக் சர்மா 75 ரன்களும் எடுத்தனர்.
ரசிர்கள் ரியாக்சன்
இந்தப் போட்டியில் லக்னோ அணி மோசமான தோல்வியைப் பெற்ற நிலையில், அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுலிடம் களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தி கொந்தளித்து பேசியிருந்தார் லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை வெளுத்து வாங்கி வருகிறார்கள். அணி பெற்ற ஒரு மோசமான தோல்விக்கு கேப்டனாகிய ராகுலை இப்படி பொது இடத்தில் வைத்து கேள்வி கேட்பது மிகவும் மோசமான நடத்தை என்றும், மற்ற அணிகளின் உரிமையாளர் எப்படி அவர்களின் கேப்டன்களிடம் நடந்து கொள்கிறார்கள் என்று பாருங்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
"சஞ்சீவ் கோயங்கா போன்ற ஒருவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. கோபம் சரியானது தான். ஆனால் இப்படி அவமரியாதை செய்யக்கூடாது. ஓரிரு ஆட்டங்களுக்கு முன்பு, குறைந்தபட்ச ஸ்கோரில் வெற்றி பெற்றபோது அனைவரும் அவரைப் பாராட்டினர்." என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
"கே.எல் ராகுல் ஒரு சிறப்பான டி20 வீரர் மற்றும் எளிமையான கேப்டன். ஆனால் உங்கள் அணியை வழிநடத்த நீங்கள் தேர்ந்தெடுத்த ஒரு வீரரை பகிரங்கமாக கண்டிப்பது முற்றிலும் முறையற்றது, கருணையற்றது மற்றும் தேவையற்றது. இது சஞ்சீவ் கோயங்காவின் வெட்கக்கேடான நடத்தை." என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார்.
"இந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல்.ராகுலுக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு கிரிக்கெட் பற்றி அவருக்கு என்ன தெரியும்? இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச கிரிக்கெட் வீரரை திட்டுவது கேவலமான செயல்!" என்று இன்னொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
"நான் கே.எல்.ராகுலின் ரசிகன் அல்ல, ஆனால் எல்.எஸ்.ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் மோசமான செயலைப் பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது. உரிமையாளரால் காட்டப்படும் முற்றிலும் தொழில்சார்ந்த மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை இது" என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“