Advertisment

குகேஷ் vs டிங் லிரன்: இறுதிப் போட்டி நடத்தும் உரிமையை டெல்லி, சென்னையை விட சிங்கப்பூருக்கு கொடுத்தது ஏன்?

சென்னை மற்றும் டெல்லி இரண்டும் ஏலம் எடுத்த நிலையில், சென்னை ஏலத்திற்கு தி.மு.க தலைமையிலான தமிழக அரசு ஆதரவளித்தது. அதே நேரத்தில், டெல்லியில் நடத்த என்.டி.ஏ தலைமையிலான மத்திய அரசு ஆதரவு தெரிவித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FIDE CEO Emil Sutovsky Singapore beat Chennai Delhi to host Gukesh vs Ding Liren Tamil News

குகேஷின் சொந்த ஊரான சென்னை அல்லது சொந்த நாட்டின் தலைநகரான டெல்லியில் இந்தப் போட்டி நடத்தப்பட்டால், அவருக்கு அது சாதகமாக இருக்கும் கருத்துக்கள் நிலவின.

கனடாவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரரான குகேஷ் வென்றிருந்தார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு செஸ் சாம்பியனான சீன வீரர் டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் குகேஷ் மோதுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டி நடைபெறும் இடம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. 

Advertisment

இந்நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது. ஆனால், உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்தியாவில் எடுத்து நடத்தும் ஹோஸ்டிங் உரிமையை பெற சென்னை மற்றும் டெல்லி நகரங்கள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த இரு நகரங்களை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் வென்றது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: FIDE CEO Emil Sutovsky explains why Singapore beat Chennai and New Delhi to host Gukesh vs Ding Liren

இந்த சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்த வேண்டும் என்று  தமிழக அரசு நேரடியாக ஒரு விண்ணப்பம் அளித்து விருப்பம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில், இந்த முக்கிய போட்டியை டெல்லி நடத்துவதற்கு மத்திய அரசு அதன் முழு ஆதரவைக் கொடுத்தது. 

இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஹோஸ்டிங் உரிமையை சிங்கப்பூர் எப்படி வென்றது என்பது குறித்து ஃபிடே தலைமை நிர்வாக அதிகாரி எமில் சுடோவ்ஸ்கி தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், நடுநிலையான இடமே அதற்கு  முக்கிய காரணியாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  

"உலக சாம்பியன்ஷிப்பிற்கான ஹோஸ்டிங் உரிமைகளை எந்த நகரம் பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், நடுநிலைமை மிகவும் ஒரு காரணியாக இருந்தது. ஆனால், நடுநிலையான இடமாக இருப்பதன் மூலம் ஒருவர் ஏலத்தில் வெற்றி பெற முடியாது. சிங்கப்பூரும் பல விஷயங்களில் மிகவும் வலுவாக ஏலத்தில் இருந்தது. போட்டியிடும் நகரங்களில் இருந்து ஏலங்கள் ஒப்பிடப்படும்போது நடுநிலை இடம் என்பது முக்கிய அளவுகோலாகும்." என்று எமில் சுடோவ்ஸ்கி கூறினார். 

குகேஷின் சொந்த ஊரான சென்னை அல்லது சொந்த நாட்டின் தலைநகரான டெல்லியில் இந்தப் போட்டி நடத்தப்பட்டால், அவருக்கு அது சாதகமாக இருக்கும் கருத்துக்கள் நிலவின. இருப்பினும், ஒவ்வொரு நகரமும் தங்கள் ஏலத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்களில், ஒளிபரப்பு வருவாய்கள் மற்றும் பிற வணிக வருவாய்கள் ஃபிடே உடன் எவ்வாறு பிரிக்கப்படும், அங்கு போட்டி எப்படி நடத்தப்படும், யார் ஏலத்திற்கு ஆதரவளிக்கிறார்கள் (மத்திய அரசு, மாநில அரசு அல்லது பணக்கார தனியார் நிறுவனங்கள் அல்லது நபர்கள்), வீரர்கள் மற்றும் பிற ஃபிடே பணியாளர்கள் தங்கியிருக்கும் இடம், ஒளிபரப்புக்கான திட்டம் என்ன என்பது போன்றவற்றை அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட வேண்டும். 

"உரிமைகளின் சதவீதம் தொடர்பாக நிதி ஒப்பந்தத்தின் விவரங்களை நாங்கள் வெளியிடவில்லை. பட்ஜெட் மற்றும் நிதி ஆதரவைப் பொறுத்தவரை, அனைத்து ஏலங்களும் ஒரே பிரிவில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தன என்று நான் கூற முடியும், ”என்று எமில் சுடோவ்ஸ்கி கூறினார்.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் செஸ் ஆர்வத்தை மீண்டும் தூண்டுவதற்காக சிங்கப்பூருக்கு இந்த தொடரை வழங்க ஃபிடே முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். 1990-களில், சிங்கப்பூரின் அண்டை நாடுகளான இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகள் இந்தப் போட்டியை நடத்தின. 1993 இல் அனடோலி கார்போவ் vs ஜான் டிம்மன் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் நடைபெற்றது. அதே நேரத்தில் மணிலா 1992 இல் செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியது.

இதுபற்றி எமில் சுடோவ்ஸ்கி பேசுகையில், "தென்கிழக்கு ஆசியாவில் செஸ் போட்டிக்கு ஊக்கமளிப்பது முக்கியம் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். ஏற்கனவே 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெரிய போட்டியை நடத்துவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் இந்தியாவை ஒரு முக்கிய நாடாக பார்க்கிறோம். 2025 ஆம் ஆண்டில் ஃபிடே-வின் மிக முக்கியமான போட்டிகளுள் ஒன்றை இந்திய நாட்டிற்கு கொண்டு வருவதில் நாங்கள் ஏற்கனவே பணியாற்றி வருகிறோம். அது பற்றிய விவரங்கள் மிக விரைவில் பகிரத் தொடங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்." என்று கூறினார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரையிலான காலக்கட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் இந்தியாவின் தலைநகரில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பிரஸ் இன்பர்மேஷன் பீரோ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, டெல்லியின் மாத வாரியான தினசரி சராசரி காற்றுத் தரக் குறியீடு நவம்பரில் 373 ஆகவும், டிசம்பரில் 348 ஆகவும் இருந்தது. நவம்பர் 6, 2023 அன்று, நகரின்  காற்றுத் தரக் குறியீடு  421-ஐத் தொட்டது.

401-500 வரம்பு என்பது மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் 301-400 வரம்பில் உள்ள அனைத்தும் மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. பிரஸ் இன்பர்மேஷன் பீரோ தரவுகள் 2018 முதல் தலைநகரில் இரண்டாவது மோசமான நவம்பர் காற்றை 2023 கண்டது (2021 மட்டுமே மோசமாக இருந்தது) என்று குறிப்பிட்டது. டிசம்பர் 2023 இல் மாதாந்திர சராசரி காற்றுத் தரக் குறியீடு  2019 முதல் ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தது. 

"எந்த நகரத்திலும் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு என்பதை தீர்மானிப்பது காலநிலை அளவுகோல்களும் ஒன்றாகும். ஆனால் பட்டியலில் மேலே எங்கும் இல்லை" என்று எமில் சுடோவ்ஸ்கி தெளிவுபடுத்தினார்.

சென்னை மற்றும் டெல்லி இரண்டும் ஏலம் எடுத்த நிலையில், சென்னை ஏலத்திற்கு தி.மு.க தலைமையிலான தமிழக அரசு ஆதரவளித்தது. அதே நேரத்தில், டெல்லியில் நடத்த என்.டி.ஏ தலைமையிலான மத்திய அரசு ஆதரவு தெரிவித்தது. இதனால், ஃபிடே ஒரு அரசியல் இழுபறிப் போரில் சிக்குவதைத் தவிர்க்க விரும்பியது.

"சென்னை அல்லது டெல்லி ஆகிய இரண்டு நகரங்களும் எப்படியும் நடுநிலை வகிக்க மாட்டார்கள். எனவே, இது உள் இந்திய அரசியலைப் பற்றியது அல்ல. இறுதிப்போட்டி நடத்தப்படும் இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை மற்றும் சிங்கப்பூரில் நான்கு இடங்கள் உள்ளன. அந்த நான்கு வெவ்வேறு இடங்களை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். அவை அனைத்தும் உயர் தரத்தில் உள்ளன. ஜூலையில் இறுதி முடிவு எடுக்கப்படும்,'' என்று அவர் கூறினார். 

ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் இடங்களின் ஆய்வு மே 31 அன்று சிங்கப்பூரின் ஏலம் சமர்ப்பிக்கப்பட்டது என்று ஃபிடே-வின் செய்திகுறிப்பு கூறுகிறது. சிங்கப்பூர் ஒரு நடுநிலையான இடம் என்றாலும், கணிசமான இந்திய மற்றும் சீன மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இது அந்த நாட்டில் செஸ் ஆர்வத்தை அதிகரிக்கும். 

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, சிங்கப்பூரில் சுமார் 6.5 லட்சம் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ மற்றும் பி.ஐ.ஓ-க்கள்) வசிக்கின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் குடிமக்களின் கணிசமான மக்கள் தொகையும் அந்நாட்டில் உள்ளது. சிங்கப்பூர் புள்ளியியல் துறையின் 2023 ஆய்வின்படி, சிங்கப்பூரின் மக்கள்தொகை 74 சதவீதம் சீனக் குடிமக்களாக உள்ளனர். அதே சமயம் 9 சதவீத குடிமக்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

குகேஷ், டிங் பங்கேற்பது உறுதி 

குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் உலக சாம்பியன்ஷிப்பில் விளையாட ஒப்புக்கொண்டதையும் எமில் சுடோவ்ஸ்கி வெளிப்படுத்தினார். டிங் உலக சாம்பியனானதிலிருந்து பலவீனமான உணர்ச்சி நிலையில் இருந்ததால், டிங் தனது பட்டத்தை இழக்கிறார் என்ற ஊகங்கள் இருந்தன.

"இருவரும் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அது ஒரு விரிவான ஒப்பந்தம்,  நகரம், சரியான தேதிகள் மற்றும் அட்டவணை போன்றவை பின்னர் அறிவிக்கப்படும்" என்று எமில் சுடோவ்ஸ்கி கூறினார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை நடைபெறும். தற்போதைய உலக சாம்பியனுக்கும், கேண்டிடேட்ஸ் போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சேலஞ்சருக்கும் இடையே 14 ஆட்டங்கள் உள்ளன. 7.5 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்ற வீரர் போட்டியில் வெற்றி பெறுவார். 14 ஆட்டங்களுக்குப் பிறகு ஸ்கோர் சமமாக இருந்தால், வெற்றியாளர் டைபிரேக் மூலம் தீர்மானிக்கப்படுவார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chess
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment