Advertisment

திருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்!

இப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்!

FIFA 2018

ஆசைத் தம்பி

Advertisment

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்கியது. சுமார் ஒருமாத காலம் நடைபெற்ற இந்த கால்பந்து திருவிழா ஜூலை 15ம் தேதி முடிவடைந்தது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.

தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஒளிபரப்பப்பட்டது.

தொடர் தொடங்கியவுடன், ரஷ்ய கீழ் அவை பெண் எம்.பியும் கம்யூனிஸ்ட் தலைவருமான டமாரா ப்ளேட்ன்யோவா, 'உலகக் கோப்பையின் போது ரஷ்ய பெண்கள் வெளிநாட்டவர்களுடன் உடல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளக் கூடாது' என்று எச்சரித்தது சுவாரஸ்யமாக இளசுகளால் சமூக தளங்களில் விவாதிக்கப்பட்டது.

எகிப்து அணி 28 வருடங்களுக்கு பிறகு இந்த கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடத் தகுதிப் பெற்றது. கடைசியாக அந்த அணி 1990-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடியிருந்தது. இதேபோல் மொராக்கோ அணி 1998-ம் ஆண்டுக்கு பிறகு இம்முறை தான் களமிறங்கியது. பெரு அணி 36 வருடங்களுக்கு பிறகு களம் இறங்கியது.

2002-க்கு பிறகு செனகல் அணி 2-வது முறையாக இம்முறை தான் உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றது. நார்டிக் நாடுகளை சேர்ந்த டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியவையும், அரபு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, துனிசியா, மொராக்கோ ஆகியவை கூட்டாக தகுதி பெற்றிருந்தது இதுவே முதன்முறையாகும்.

அதேசமயம், நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெறவில்லை.

லீக் சுற்றில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் களமிறங்கிய பலம் வாய்ந்த அணியான அர்ஜென்டினா, கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திடம் டிரா ஆக, நொந்து போனார் மெஸ்ஸி. அர்ஜென்டினாவின் ஆட்டத்தை பார்த்து கடுப்பாகி போன, அர்ஜென்டினா முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா, 'இப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது' என பகிரங்கமாகவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அர்ஜென்டினா இந்த வேதனையில் இருக்க, நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி அணி லீக் சுற்றில் மெக்சிகோ அணியிடம் தோற்றே போனது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எப்படியோ தட்டுத் தடுமாறி அர்ஜென்டினா, போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற, ஜெர்மனியோ லீக் சுற்றோடு வெளியேறியது.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், 1938ம் ஆண்டுக்கு பிறகு, முதல் சுற்றோடு ஜெர்மனி வெளியேறுவது இதுவே முதன் முறையாகும். பலம் வாய்ந்த ஜெர்மனி அணி, ஹிட்லர் ஆட்சிக்கு பிறகு, இம்முறை தான் முதல் சுற்றோடு வெளியேறியது.

லீக் போட்டிகளின் முடிவில், ‘A’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘B’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ‘C’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘D’ பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, E’ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, ‘F’ பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ‘G’ பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, ‘H’ பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் லீக் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.

நாக் அவுட் சுற்றில் ஒரே நாளில் இரு கால்பந்து ஜாம்பவான்களான மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும், ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும் ஒரே நாளில் வெளியேற, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். கேரளாவில் ஒரு மெஸ்ஸி ரசிகர் தற்கொலையே செய்து கொண்டார்.

பிரான்ஸ், உருகுவே, ரஷியா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதிச் சுற்றின் முடிவில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. முன்னாள் உலக சாம்பியன் பிரேசில் அணியும் காலிறுதி சுற்றோடு வெளியேறியது. நெய்மரின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.

இப்படி பல சோதனைகளைக் கடந்து இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறின. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் வெளியேறின.

பிரான்ஸ் உடனான அரையிறுதி போட்டி முடிந்த பின்னர், பிரான்ஸ் அணியை பெல்ஜியம் கோல் கீப்பர் திபவ்ட் கோர்டோய்ஸ் மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர், "மிகவும் அருவருப்பான மேட்ச் இது. பிரான்ஸ் அணி விளையாடவே இல்லை, 11 வீரர்களையும் தடுப்பாட்டக்காரர்களாக களத்தில் நிறுத்தியது. கோல் போஸ்ட்டில் இருந்து 40 அடி தூரத்தில் 11 வீரர்களையும் நிறுத்தி வைத்துவிட்டது. இது தான் கால்பந்து ஆட்டமா?. எங்களை விட சிறந்த அணி வெற்றி பெற்றிருந்தால் கவலையில்லை, ஒன்றுமே ஆடாத பிரான்ஸ், ஒன்றுமேயில்லாத பிரான்ஸ் வெற்றி பெற்றதுதான் வெறுப்பாக இருக்கிறது. பெல்ஜியம் வெற்றி பெறாதது கால்பந்தாட்டத்துக்கு வெட்கக் கேடு, பிரான்ஸ் வெற்றி பெற்றதும் கால்பந்துக்கு வெட்கக்கேடு" என்று காட்டமாக பேசினார். ஆனால், இதையெல்லாம், காதில் வாங்கிக் கொள்ளாத பிரான்ஸ் அணி வீரர் கிரீஸ்மேன் கூறுகையில், "என்ன வியூகம் அமைத்து ஆடினோம் என்பது முக்கியமல்ல... இறுதியில் வென்றோமா என்பதே முக்கியம்" என்றார்.

அதேபோல், அரையிறுதிப் போட்டிக்கு முன்னர் குரோஷியா அணியை 'களைப்படைந்த அணி' என்று இங்கிலாந்து ஊடகங்கள் விமர்சனம் செய்ய, குரோஷியா 2 - 1 என வென்று பதிலடி கொடுத்தது.

கடந்த 15ம் தேதி இறுதிப் போட்டியில், அதீத நம்பிக்கையுடன் களமிறங்கிய குரோஷிய அணியை 4-2 என்ற கோல் கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் வென்றது. இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர் உட்பட குரோஷிய அணிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பெரும் ஆதரவு இருந்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதன் முதலில் விளையாடுவதால், இந்த ஆதரவு கிடைத்தது. ஆனா, பிரான்ஸ் அபாரமாக ஆடி கோப்பையை வசப்படுத்தியது.

உலகக் கோப்பையில் மொத்தம் நடந்த 46 ஆட்டத்தில் 169 கோல்கள் அடிக்கப்பட்டன. ஒரு ஆட்டத்துக்கான சராசரி கோல் 2.64 ஆகும். இங்கிலாந்து கேப்டன் ஹேரிகேன் அதிகபட்சமாக 6 கோல்கள் அடித்து ‘தங்க ஷூ’வை பெற்றார்.

அவரைத் தொடர்ந்து, பிரான்ஸ் வீரர்கள் கிரீஸ்மேன், எம்பாப்வே 4 கோல்களும், பெல்ஜியமின் லுகாகோ, ரஷ்ய வீரர் செர்ஷோவ், போர்ச்சுகலை சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் 4 கோல்கள் அடித்தனர்.

அதேபோல், குரோஷியாவின் பெரிசிச், பெல்ஜியம் கேப்டன் ஹசார்ட், ரஷ்ய வீரர் டிசுபயா, கொலம்பியாவின் யேரிமினா, உருகுவே வீரர் கவானி, ஸ்பெயினின் நட்சத்திர ஆட்டக்காரர் டியாகோ கோஸ்டா ஆகிய வீரர்கள் 3 கோல்கள் இந்த உலகக் கோப்பையில் அடித்துள்ளனர்.

நெய்மர் (பிரேசில்), மோட்ரிச் (குரோஷியா) உள்ளிட்ட 13 வீரர்கள் தலா 2 கோலும், மெஸ்சி உள்ளிட்ட 84 வீரர்கள் தலா 1 கோலும் அடித்துள்ளனர்.

இந்த உலககோப்பையில் 12 சேம் சைட் கோல்களும் விழுந்துள்ளன. 1998-ல் 6 சுயகோல்கள் விழுந்ததே இதற்கு முன்பு அதிகபட்சமாக இருந்தது. இப்போது அந்த மோசமான சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அணி கோப்பையை வென்றவுடன், நாடு முழுவதும் அந்நாட்டு மக்கள் வீதியில் வந்து கொண்டாடினர். அப்போது வன்முறை வெறியாட்டங்களும் அரங்கேறியது.

கொண்டாட்டத்தின் போது, சிலர் மதுபானங்களை அருந்தியதால் போதை தலைக்கேறி வரம்பு மீறி நடந்து கொண்டனர். பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சில ரசிகர்கள் மதுபான கடைகளை உடைத்து உள்ளே இருந்த மதுபான பாட்டில்களை அள்ளிச் சென்றனர். அந்த இடத்தில் இருந்து கலைந்து செல்ல மறுத்தக் கூட்டம் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டது. பாரீஸ் மட்டுமின்றி லியோன் உள்ளிட்ட நகரங்களிலும் கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறியது.

இருசக்கர வாகனங்கள், கார்களில் சென்ற குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் வன்முறை கும்பல் தாக்குதலில் காயமடைந்தனர். சாலையில் மதுபான பாட்டில்களை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். லியானில் உள்ள சிட்டி சென்டர் பகுதியில் நூற்றுக் கணக்கானோர் திரண்டு வன்முறையில் ஈடுபட்டதால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை போலீஸார் கலைத்தனர்.

இந்த களேபரங்களையும் மீறி, கோப்பையுடன் நாடு திரும்பிய பிரான்ஸ் அணிக்கு ரசிகர்கள் மெகா வரவேற்பு அளித்துள்ளனர்.

20 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற பிரான்ஸுக்கு நமது வாழ்த்துகள். அதேபோல், முதன் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறி மக்களின் மனங்களை வென்ற குரோஷியா அணிக்கும் நமது வாழ்த்துகள்.

உலகக் கோப்பை 2018 தொடர் இனிதே நிறைவுற்றது!.

Fifa Fifa 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment