FIFA World Cup 2022 Final: அர்ஜென்டினா vs பிரான்ஸ், 2022 உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஸ்கோர் அப்டேட்ஸ்: 63 ஆட்டங்களுக்குப் பிறகு, அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் மட்டுமே 22வது FIFA உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. C மற்றும் D பிரிவில் முதலிடம் பிடித்த இரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சந்தித்து தங்களது மூன்றாவது உலகப் பட்டத்தை வெல்ல முயலும். அர்ஜென்டினா 1978 மற்றும் 1986 இல் கோப்பையை வென்றது, பிரான்ஸ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் கோப்பையை வென்றது, 1998 இல் தங்கள் சொந்த மண்ணில் விளையாடியபோது கோப்பையை வென்றது.
அர்ஜென்டினா தனது பயணத்தை சவுதி அரேபியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியுடன் தொடங்கியது. லியோனல் மெஸ்ஸி மற்றும் கோ. அதன் பின்னர் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிப்பெற்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடித்து, மெக்சிகோ, போலந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் குரோஷியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம், பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, லீக் கட்டத்தில் துனிசியாவிடம் தோற்றதற்கு முன், டென்மார்க்கை தோற்கடித்தது. அடுத்ததாக போலந்து, இங்கிலாந்து மற்றும் மொராக்கோ ஆகிய அணிகளை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
அர்ஜென்டினாவின் மூன்றாவது உலகப் பட்டத்திற்கான கனவு, உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக தனது இறுதிப் போட்டியில் விளையாடும் கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் மீது தங்கியுள்ளது, மேலும் நீண்ட காலமாக அவர் தவறவிட்ட கோப்பையுடன் போட்டியில் தனது கதையை முடிக்கப் பார்க்கிறார். 35 வயதான அவர் 2014 ஆம் ஆண்டில் கூடுதல் நேரத்தில் ஜெர்மனியிடம் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்தபோது கோப்பையை வெல்வதற்கு மிக அருகில் வந்தார். மறுபுறம், 1958 மற்றும் 1962 இல் பிரேசிலுக்குப் பிறகு தொடர்ச்சியாக உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற பெருமையை பிரான்ஸ் எதிர்பார்க்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கியது.
இரு அணிகளும் விளையாடும் 11 வீரர்களின் விவரம்
பிரான்ஸ்: ஹ்யூகோ லோரிஸ் (கேப்டன்), ஜூல்ஸ் கவுண்டே, ரஃபேல் வரனே, தயோட் உபமேகானோ, தியோ ஹெர்னாண்டஸ், அன்டோயின் க்ரீஸ்மேன், ஆரேலியன் டிச்சௌமேனி, அட்ரியன் ராபியோட், ஓஸ்மான் டெம்பேலே, ஆலிவியர் ஜிரோட், கைலியன் எம்பாப்பே
அர்ஜென்டினா: எமிலியானோ மார்டினெஸ், கிறிஸ்டியன் ரொமேரோ, நிக்கோலஸ் ஓட்டமெண்டி, நஹுவேல் மோலினா, நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ, ரோட்ரிகோ டி பால், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், என்ஸோ பெர்னாண்டஸ், ஏஞ்சல் டி மரியா, லியோனல் மெஸ்ஸி (கேப்டன்), ஜூலியன் அல்வாரெஸ்
மெஸ்ஸி முதல் கோல்
தொடக்கம் முதலே ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினர். கிடைத்த பெனால்டி வாய்ப்பை அருமையாக கோல் ஆக்கினார். பிரான்ஸ் அணி கோல் அடிக்க முடியாமலும், அர்ஜென்டினாவை சமாளிக்க முடியாமலும் தடுமாறியது.
அர்ஜென்டினா 2-வது கோல்
ஆட்டத்தின் 36 ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி கொடுத்த அருமையான பாஸை, அலிஸ்டர் வலதுபுறத்தில் டி மரியாவுக்கு பாஸ் செய்தார். அவர் பிரான்ஸ் வீரர் லோரிஸைக் கடந்து கோல் ஆக்கினார். அர்ஜென்டினா 2 கோல்களுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
எம்பாப்வே அடுத்தடுத்து 2 கோல்
இரண்டாம் பாதியில் அர்ஜென்டினா தடுப்பாட்டத்தை தீவிரப்படுத்தியது. பிரான்ஸ் கோல் அடிக்க கடுமையாக போராடியது. ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் எம்பாப்வே கோல் அடித்து, பிரான்ஸை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார். உடனடியாக 81 ஆவது நிமிடத்தில் அடுத்த கோலையும் எம்பாப்வே அடித்து ஸ்கோரை சமன் செய்தார். 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சம நிலையில் இருந்தன.
கூடுதல் நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளை பிரான்ஸ் கோல் ஆக்க முயற்சித்தது. அர்ஜென்டினா போராடி தடுத்தது. 97 ஏழாவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் சிறப்பாக தடுத்தார்.
எக்ஸ்ட்ரா டைமில் மெஸ்ஸி அதிரடியாக கோல் அடிக்க அர்ஜென்டினா முன்னிலைப் பெற்றது. ஆனால், சிறிது நேரத்திலே எம்பாப்வே தனது 3 ஆவது கோலை அடித்து ஸ்கோரை சமன் செய்தார். பிரான்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை எம்பாப்வே எளிதாக கோல் ஆக்கினார். தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையான போராடின. ஆனால் கூடுதல் நேரம் சமனில் முடிவடைந்தால், இரு அணிகளுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.
முதல் வாய்ப்பில் எம்பாப்வே கோல் அடித்தார். அதேபோல் மெஸ்ஸி முதல் வாய்ப்பில் எளிதாக தட்டி விட்டு கோல் அடித்தார். பிரான்ஸின் இரண்டாவது வாய்ப்பை அர்ஜெண்டினா கோல் கீப்பர் சிறப்பாக தடுத்தார். அதேநேரம், இரண்டாவது வாய்ப்பை அர்ஜெண்டினா கோல் ஆக்கி முன்னிலை பெற்றது.
மூன்றாவது வாய்ப்பை கோல் போஸ்ட்டுக்கு வெளியே அடித்து பிரான்ஸ் வீரர் வீணாக்கினார். ஆனால் அர்ஜெண்டினா மூன்றாவது வாய்ப்பையும் கோல் அடித்து அசத்தியது. நான்காவது வாய்ப்பில் பிரான்ஸ் கோல் அடித்தது. அதேநேரம் அர்ஜென்டினாவும் கோல் அடிக்க 4-2 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜென்டினா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.