scorecardresearch

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: பீலேவின் வார்த்தைகளை நிஜமாக்குவாரா நெய்மர்?

FIFA World Cup 2018: பீலேவின் வார்த்தைகளை நிஜமாக்குவாரா நெய்மர்?

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: பீலேவின் வார்த்தைகளை நிஜமாக்குவாரா நெய்மர்?

ஆசைத் தம்பி 

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். இன்று இரண்டாவது அணியாக பிரேசிலைப் பற்றி பார்க்கலாம்.

ஃபிபா உலகக் கோப்பைத் தொடரில் வெற்றிகரமான அணி என்றால் அது பிரேசில் தான். இதுவரை ஐந்து உலகக் கோப்பையை வென்றுள்ளது அந்த அணி. 1958, 1962, 1970, 1994 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் உலகக் கோப்பையை வென்று இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 104 உலகக் கோப்பை போட்டிகளில் ஆடியுள்ள பிரேசில், 70 போட்டிகளில் வெற்றி பெற்று, அதிக வெற்றி சதவிகிதத்தை கொண்ட அணி என்ற பெயரையும் தன் வசம் வைத்துள்ளது. அதுமட்டுமின்றி, அனைத்து உலகக்கோப்பை தொடரிலும் தவறாக தேர்வாகும் ஒரே தேசிய அணி பிரேசில் மட்டுமே.உலகக் கோப்பையை போன்று, ஃபிபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பைகளையும் 1997, 2005, 2009, 2013 என நான்கு முறை கைப்பற்றியிருக்கிறது பிரேசில் அணி.

மேலும், நான்கு வெவ்வேறு கண்டங்களில் ஃபிபா உலகக் கோப்பையை வென்ற ஒரே தேசிய அணி பிரேசில் தான். ஐரோப்பா (1958 சுவீடன்), தென் அமெரிக்கா (1962 சிலி), வட அமெரிக்காவில் இருமுறை (1970 மெக்சிகோ மற்றும் 1994 யுனைட்டட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஆசியாவில் ஒருமுறை (2002 கொரியா / ஜப்பான்) என வெவ்வேறு கண்டங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது பிரேசில் அணி.

குறிப்பாக, ஃபிபா அங்கீகரிக்கும் மூன்று முக்கிய தொடர்களான உலகக் கோப்பை, கான்ஃபெடரேஷன்ஸ், ஒலிம்பிக் என மூன்றிலும் கோப்பைகளையும் பிரேசில் வென்று சாதனை படைத்துள்ளது. மேலும், தொடர்ச்சியாக 35 கால்பந்து போட்டிகளில் வென்று, ஸ்பெயினுடன் அந்த சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளது பிரேசில்.

பிரேசில் அணியின் பொற்காலம் என்றால் அது 1958-70 காலக்கட்டம் தான். அப்போது, பிரேசில் கால்பந்து அணியை ஆண்டுக் கொண்டிருந்தவர் ‘தி கிரேட்’ பீலே. உலகின் இரு தலை சிறந்த வீரர்கள் என்றால் மாரடோனா, பீலே என்று கண்களை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம்.

இப்படி பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கும் பிரேசில், கடைசியாக உலகக் கோப்பையை வென்று 16 வருடங்கள் ஆகிவிட்டது. அதுமட்டுமே, அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. எப்படியும் இம்முறை கோப்பையை வென்றுவிட வேண்டும் என தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது அந்த அணி.

உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள பிரேசில் அணி வீரர்கள் விவரம்,

கோல் கீப்பர்கள்:

ஆலிசன், கேசியோ, எடர்சன்

டிஃபென்டர்கள்:

தியாகோ சில்வா, மிராண்டா, பெட்ரோ ஜெரோமெல், ஃபிலிப் லூயிஸ், மார்கெலோ, மார்க்கின் ஹோஸ், டேனிலோ, ஃபேக்னர்.

மிட் பீல்டர்கள்:

கேஸ்மிரோ, ரெனாட்டோ ஆகஸ்டோ, ஃபிலிப் கவுட்டின்ஹோ, ஃபவுலின்ஹோ, ஃபெர்னான்டின்ஹோ, ஃப்ரெட், வில்லியன்.

ஃபார்வேட்ஸ்:

டக்லஸ் கோஸ்டா, கேப்ரியல் ஜீசஸ், நெய்மர், ராபெர்ட்டோ ஃபெர்மினோ, டைசன்.

இந்த 23 வீரர்களுடன் 2018 உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது பிரேசில் கால்பந்து அணி. நெய்மர் அந்த அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக பார்க்கப்படுகிறார். பிரேசில் ஜாம்பவான் பீலேவுடன் ஒப்பிடப்படும் நெய்மர் இதுவரை 53 கோல்களை அடித்துள்ளார். இந்த உலகக் கோப்பைக்கு பிரேசில் கேப்டனாகவும் நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தொடர்ந்து அவர் காயத்தில் சிக்குவது பெரும் பிரச்சனையாக உள்ளது. பல மாதங்களாக அவர் காயத்தால் அவதிப்பட்ட வந்த நிலையில், பல ஆட்டங்களில் அவர் ஆடவில்லை.

பிரான்ஸ் அணியின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வந்த நெய்மருக்கு கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் களம் இறங்கவில்லை.

இருப்பினும், உலகக் கோப்பைக்கு அவர் தேர்வானதால் நிம்மதி அடைந்தனர் பிரேசில் ரசிகர்கள். தற்போது மிகத் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் அவர். இதுகுறித்து சக வீரர் டேனிலோ கூறுகையில், “நாளுக்கு நாள் நெய்மரின் வேகம் அதிகரித்து வருகிறது. அவரது வேகத்தை கட்டுப்படுத்துவது கடினமாகிக் கொண்டே போகிறது” என்று தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி நிச்சயம் ரசிகர்களுக்கு ஸ்பெஷலானது தான். ஏனெனில், 10 பேர் சூழ்ந்தாலும், அத்தனை பேரையும் ஏமாற்றி, பந்தை லாவகமாக கடத்திச் சென்று கோல் போஸ்ட்டுக்குள் அடிப்பதில் நெய்மருக்கு நிகர் நெய்மர் தான்.

இவரைத் தவிர, ஃபிலிப் கவுடின்ஹோ மற்றும் கேப்ரியல் ஜீசஸ் உள்ளிட்ட இதர பிரேசில் வீரர்கள் மீதும் கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உலகக்கோப்பையில் பிரேசில் ‘இ’ பிரவில் இடம்பிடித்துள்ளது. பிரேசில் அணியுடன் சுவிட்சர்லாந்து, செர்பியா, கோஸ்டா ரிகா அணிகளும் அந்த பிரிவில் இடம்பிடித்துள்ளன. கடந்த முறை உள்ளூரில் நடைபெற்ற போட்டியில் பிரேசில் அரையிறுதியில் ஜெர்மனி அணியிடம் வீழ்ந்து வெளியேறியது. பீலே போன்ற ஜாம்பாவான்கள் கோலோச்சிய, பிரேசில் அணி 7 கோல்கள் வாங்கி உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் அடைந்த தோல்வி மறக்க முடியாதது. அதை மறக்கும் வகையில், தற்போது கோப்பையை வென்றே தீருவது என்ற நோக்கில் களம் காண்கிறது பிரேசில்.

ஜூன் 8-ம் தேதி வரை இங்கிலாந்தில் தங்கியிருக்கும் பிரேசில் அணி, பின்னர் வியன்னா சென்று, ஆஸ்திரியாவுடன் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து ரஷ்யாவின் சோச்சி நகருக்கு செல்லும் பிரேசில், ஜூன் 17-ம் தேதி நடைபெறும் தனது முதலாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. பிரேசில் அணியின் ஆட்டத்தை காண பிரேசில் ரசிகர்கள் மட்டுமல்ல, உலகெங்குமுள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிரேசில் அணி கோப்பையை கைப்பற்றும் நிலையில், அந்த அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒவ்வொருவருக்கும். 750 மில்லியன் பவுண்ட் அதாவது 6.75 கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, ‘உலகக்கோப்பையில் நான் பெற்ற அதிர்ஷ்டம் நெய்மரும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என ஜாம்பவான் பீலே வாழ்த்தியிருப்பது மெய்யாக வேண்டும் என்பதே பிரேசில் ரசிகர்களின் விருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Fifa world cup foot ball 2018 a complete view of brazil team