Advertisment

ஃபிபா உலகக் கோப்பை 2018: தோனி ஃபார்முலாவில் கோப்பையை வெல்லுமா அர்ஜென்டினா?

முதன் முதலாக அர்ஜென்டினா 1901ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி கால்பந்து உலகிற்குள் அடியெடுத்து வைத்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃபிபா உலகக் கோப்பை 2018: தோனி ஃபார்முலாவில் கோப்பையை வெல்லுமா அர்ஜென்டினா?

ஆசைத் தம்பி

Advertisment

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசவிருக்கிறோம். இன்று முதல் அணியாக அர்ஜென்டினாவைப் பற்றி பார்க்கலாம்.

முதன் முதலாக அர்ஜென்டினா அணி 1901ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி தான் கால்பந்து உலகிற்குள் அடியெடுத்து வைத்தது. மாண்டேவிடியோ எனும் இடத்தில் நடந்த அந்த போட்டியில் உருகுவே அணியுடன் மோதிய அர்ஜென்டினா 3 -2 எனும் கோல் கணக்கில் வென்றது.

உலகக்கோப்பை தொடர்களை பொறுத்தவரை, இதுவரை ஐந்துமுறை அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 1930ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் தான் முதன் முதலாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், இதில் உருகுவே அணியுடன் 4 - 2 என்ற கோல் கணக்கில் தோற்றது. அதன்பின் 1978ம் ஆண்டு மீண்டும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா, நெதர்லாந்தை, 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. மீண்டும் 1986ம் ஆண்டு மாரடோனா தலைமையில், வெஸ்ட் ஜெர்மனி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜென்டினா.

ஆனால், 1990ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அதே வெஸ்ட் ஜெர்மனி அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது அர்ஜென்டினா. மீண்டும் 2014ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில், ஜெர்மனி அணியிடம் 1 -0 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டியில் தோற்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது மீண்டும் மெஸ்ஸி தலைமையில் உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற வேட்கையோடு களமிறங்குகிறது அர்ஜென்டினா.

அர்ஜென்டினா அணி வீரர்கள் விவரம்:

2018 உலகக் கோப்பையில் மொத்தம் 23 வீரர்களுடன் பங்கேற்றுள்ளது அர்ஜென்டினா. அவர்கள் குறித்த விவரங்களை இங்கே பார்ப்போம்.

கோல் கீப்பர்கள்:

நாஹல் குஸ்மன், ஃபிராங்கோ அர்மானி, வில்லி கேபல்ரோ

டிஃபன்டர்கள்:

கேப்ரியல் மெர்காடோ, நிகோலஸ் டாக்லியாஃபிகோ, கிறிஸ்டியன் அன்சால்டி, ஃபெடரிகோ ஃபாசியோ, மார்கஸ் அகுனா, மார்கஸ் ரோஜோ, நிகோலஸ் ஓட்மெண்டி.

மிட் ஃபீல்டர்கள்:

லூகாஸ் பிக்லியா, எவர் பனேகா, ஏஞ்சல் டி மரியா, மேக்சிமிலியானோ மேசோ, ஜேவியர் மேஷ்கரேனோ, மானுவேல் லான்சினி, எடார்டோ சால்வியோ, ஜியோவனி லோ செல்சோ, கிறிஸ்டியன் பேவோன்.

ஃபார்வேர்ட்ஸ்:

கோன்சாலோ ஹிகுவேன், லயோனல் மெஸ்ஸி, செர்ஜியோ அகுரோ, பாலோ டைபலா.

அணியில் இருக்கும் பல வீரர்கள் 30 வயதை கடந்தவர்களாக இருக்கின்றனர். கிட்டத்தட்ட ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போன்றே பல சீனியர் வீரர்களை கொண்டுள்ளது அர்ஜென்டினா அணி.

இதனாலேயோ என்னவோ, 'உலகக் கோப்பையில் தோனியின் கேப்டன்ஷிப்பை நானும் பின்பற்றப்போகிறேன்' என அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி கூறியிருக்கிறார்.

இதுவரை 20 ஃபிபா உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றிருக்கும் அர்ஜென்டினா, இருமுறை மட்டுமே கோப்பையை ஏந்தியுள்ளது. இதனால், இம்முறை எப்படியும் பட்டத்தை தட்டி தூக்கிவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக உழைத்து வருகிறது அர்ஜென்டினா.

கேப்டன் மெஸ்ஸி அந்த அணியின் யானை பலம் என்பதில் சந்தேகமில்லை. 2005ம் ஆண்டு முதல் அர்ஜென்டினா அணிக்காக ஆடிவரும் மெஸ்ஸி, இதுவரை 124 போட்டிகளில் ஆடி 64 கோல்கள் அடித்துள்ளார். வேறு எந்தவொரு அர்ஜென்டினா வீரரும் இத்தனை கோல்கள் அடித்ததில்லை. 'எவர்கிரீன்' மாரடோனா 91 போட்டிகளில் ஆடி 34 கோல்கள் அடித்துள்ளார்.

தற்போதைய கால்பந்து உலகில் தலைசிறந்த கால்பந்து வீரராக கொண்டாடப்படும் மெஸ்ஸி, மாரடோனாவை போல நாட்டுக்காக கோப்பையையும் வென்றுத் தர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த உலகக்கோப்பையில் இறுதி போட்டி வரை சென்ற அர்ஜென்டினா அணி, அதன்பின் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் சிலியிடம் இரண்டு முறை அர்ஜென்டினா தோற்றது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மெஸ்ஸி, அக்வேரோ, டைபாலா போன்ற உலகின் தலைசிறந்த வீரர்களை கொண்டு பரிதாபமான நிலையில் இருந்த அந்த அணியின் பயிற்சியாளர் பவுசாவை நீக்கி, சிலி தேசிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சாம்பவோலியை பயிற்சியாளராக நியமித்துள்ளது அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு.

தனிப்பட்ட முறையில் பல பல சாதனைகளை தன்வசம் அடுக்கி வைத்திருக்கும் மெஸ்ஸிக்கு கோப்பை என்பது மட்டும் கனவாகவே இருந்துவருகிறது. இந்தத் தொடரில், அந்தப் பெயரை உடைத்தெறியும் கட்டாயமும் மெஸ்ஸிக்கு உள்ளது. இதனால், அர்ஜென்டினா அணி மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

தற்போது, உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில், ஹைதி அணிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸியின் ‘ஹாட்ரிக்’ கோலால் அர்ஜென்டினா அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. தொடருக்கு இன்னும் 2 வாரமே எஞ்சி இருக்கும் நிலையில் எல்லா அணிகளும், பயிற்சி ஆட்டங்களில் விளையாடி தங்களது ஆட்டத் திறனை பட்டை தீட்டி வருகின்றன.

அடுத்து அர்ஜென்டினா அணி, பார்சிலோனா (ஸ்பெயின்) சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. உலக கோப்பை போட்டியில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜென்டினா அணி தனது லீக் ஆட்டங்களில் ஜூன் 16-ம் தேதி ஐஸ்லாந்தையும், 21-ம் தேதி குரோஷியாவையும், 26-ம் தேதி நைஜீரியாவையும் சந்திக்கிறது.

வயதான வீரர்கள் என கிண்டலடிக்கப்பட்ட வீரர்களை கொண்டு ஐபிஎல்லில் தோனி பட்டம் வென்றதை போல், மெஸ்ஸியும் பட்டம் வென்றால், நிச்சயம் தமிழகம் கொண்டாடும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், தோனி ஃபார்முலாவை நம்பியே மெஸ்ஸி இப்போது களம் இறங்கவுள்ளார்.

Lionel Messi Argentina Fifa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment