ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: விபச்சார அழகிகள் உடனான உல்லாசத்தை தாண்டி கோப்பையை வெல்லுமா மெக்சிகோ?

மனைவியுடனோ, பெண் தோழிகளுடனோ உறவு கொள்ளச் சொல்வது என்பது சில கால்பந்து அணிகளின் ஸ்டிராடஜியாகும்

ஆசைத் தம்பி

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று மெக்ஸிகோ அணியைப் பற்றி பார்க்கலாம்.

மெக்சிகோ தேசிய கால்பந்து அணி இதுவரை 16 முறை ஃபிபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ளது. கால்பந்து அரங்கில் மெக்சிகோ அணியைப் பற்றி ஒரே செண்டன்ஸில் அடையாளப்படுத்த வேண்டுமெனில் இதைச் சொல்லலாம்.

அதுவும், 1994ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து தொடர்ச்சியாக இந்தாண்டு வரை நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடர் வரை மெக்சிகோ தகுதிப் பெற்றுள்ளது. உலகின் ஆறு அணிகள் மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதில் ஒரு அணியாக மெக்சிகோவும் தன்னை நிலை நாட்டியுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த ஆறு உலகக் கோப்பைத் தொடரிலும் குரூப் ஸ்டேஜை தாண்டிய மூன்று அணிகளில் மெக்சிகோவும் ஒன்று. பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் கடந்த ஆறு உலகக் கோப்பைத் தொடரிலும் குரூப் ஸ்டேஜை தாண்டியுள்ளன.

அதேபோல், ஃபிபா அங்கீகரிக்கும் மூன்று முக்கிய கால்பந்து தொடர்களில் (உலகக் கோப்பை, ஃபெடரேஷன்ஸ் கோப்பை மற்றும் கோடைக்கால ஒலிம்பிக்ஸ்) இரண்டு தொடர்களை வென்ற எட்டு அணிகளில் மெக்சிகோவும் ஒன்றாகும். ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, அர்ஜென்டினா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் உருகுவே ஆகிய அணிகளும் இந்த சாதனையை படைத்துள்ளன. இதில், கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையை 1999ம் ஆண்டிலும், கோடைக்கால ஒலிம்பிக்ஸ் பட்டத்தை 2012ம் ஆண்டிலும் மெக்சிகோ வென்றிருந்தது.

1930ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை அறிமுகம் செய்யப்பட்ட போது, அந்தத் தொடரில் மெக்சிகோ கலந்து கொண்டது. அதில் ஜூலை 13ம் தேதி மெக்சிகோ தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.

உலகக் கோப்பைகளில் மெக்சிகோ அணியின் மிகச் சிறந்த செயல்பாடு என்றால் அது 1970 மற்றும் 1986 ஆண்டில் மட்டும் தான். இவ்விரு உலகக் கோப்பையிலும் மெக்சிகோ அணி காலிறுதி வரை முன்னேறியது. இதில் ஆச்சர்யம் என்னவெனில், இவ்விரு உலகக் கோப்பையும் மெக்சிகோவில் தான் நடத்தப்பட்டது.

அதேபோல், மெக்சிகோ முதன் முதலாக 1923ம் ஆண்டு கௌதமாலா அணிக்கு எதிராகத் தான் தனது முதல் கால்பந்து போட்டியில் ஆடியது. இதில், மெக்சிகோ 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

1990ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மெக்சிகோ அணிக்கு தடை விதிக்கப்பட்டது. காரணம் என்னவெனில், 1989ல் நடந்த ஃபிபா உலக யூத் சான்பியன்ஷிப் தொடரில், நிர்ணயிக்கப்பட்ட வயதின் அளவின் தாண்டிய வீரர்களை அணியில் சேர்த்து மெக்சிகோ அந்த தொடரில் பங்கேற்றது. இதை கண்டறிந்த ஃபிபா, மெக்சிகோ தேசிய அணிக்கு 1990 உலகக் கோப்பையில் பங்கேற்க தடை விதித்தது. இச்சம்பவம் அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட வரலாற்றை கொண்ட மெக்சிகோ அணி, இந்த உலகக் கோப்பையில் எப்படியும் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட வேண்டும் என மிகத் தீவிரமாக உள்ளது.

2018 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் மெக்சிகோ அணி வீரர்கள் விவரம்:

கோல் கீப்பர்கள்:

ஜோஸ் டி ஜீசஸ் கொரோனா, ஆல்ஃப்ரெடோ தலவெரா, கில்லெர்மோ ஓச்சோ.

டிஃபென்டர்:

ஹியோகோ அயலா, கார்லஸ் சால்கெடோ, ரஃபேல் மார்க்ஸ், தியாகோ ரெயிஸ், மிகல் லாயுன், ஹெக்டர் மொரேனோ, எட்சன் அல்வாரெஸ், ஜீசஸ் கலர்டோ.

மிட் ஃபீல்டர்:

ஜொனாதன் டோஸ் சாண்டோஸ், மார்க்ஸ் ஃபேபியன், ஜியோவனி டோஸ் சாண்டோஸ், ஹெக்டர் ஹெரேரா,
ஆண்ட்ரஸ் கார்டாடோ (கேப்டன்), ஜேவியர் ஆன்கினோ.

ஃபார்வேர்ட்ஸ்:

ரால் ஜிமெனேஸ், கார்லஸ் வெலா, ஜேவியர் ஹெர்னான்டஸ், ஜீசஸ் மானுவேல் கொரோனா, ஓரிப் பெரல்டா, ஹிர்விங் லோசானோ.

இந்த அணியுடன் உலகக் கோப்பையில் களம் இறங்குகிறது மெக்சிகோ அணி. இந்தாண்டு தொடக்கம் முதல் மொத்தம் 6 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் மெக்சிகோ ஆடியுள்ளது. இதில், போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவ்னியா அணியை 1-0 என்றும், ஐஸ்லாந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கிலும், ஸ்காட்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் என மூன்று போட்டிகளில் மெக்சிகோ வென்றது.

ஆனால், குரோஷியா அணியுடன் 0-1 என்றும், டென்மார்க் அணியுடன் 2-0 என்றும் மெக்சிகோ தோற்றுள்ளது. இது ரசிகர்களை  அதிர்ச்சி அடைய வைத்தது. மற்றொரு போட்டியில் வேல்ஸ் அணியுடன் 0-0 என டிரா செய்தது மெக்சிகோ. ஆக, பயிற்சி ஆட்டத்தில் மெக்சிகோவில் வெற்றிவிகிதம் 50 சதவிகிதமாக உள்ளது.

உலகக் கோப்பையில் ‘F’ பிரிவில் மெக்சிகோ இடம்பெற்றுள்ளது. இதில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி, ஸ்வீடன், தென்கொரியா ஆகிய அணிகள் உள்ளன. இதனால், மெக்சிகோவுக்கு லீக் சுற்றிலேயே கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆண்ட்ரஸ் கார்டாடோ, ஜேவியர் ஹெர்னான்டஸ், ரஃபேல் மார்க்ஸ் உள்ளிட்ட வீரர்கள் மெக்சிகோ அணியின் முக்கிய பலமாக விளங்குகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் தவறாமல் உலகக் கோப்பையில் பங்கேற்கும் தங்கள் அணி, இம்முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள மெக்சிகோ ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால், வீரர்கள் எதை விரும்புகிறார்கள்? என்று தெரியவில்லை. ஏனெனில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மெக்சிகோ அணி வீரர்களின் செயல்பாடு இந்த கேள்வியை நம்மை எழுப்ப வைக்கிறது.

இந்த உலகக் கோப்பைக்கு ரஷ்யாவுக்கு புறப்படுவதற்கு முன், மெக்சிகோ அணி வீரர்களுக்கு விருந்து நிகழ்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் விருந்தில் 30க்கும் மேற்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.

இது குறித்து மெக்சிகோ கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் குல்லெர்மோ கான்ட்வி கூறுகையில், “வீரர்கள் யாருக்கும் தண்டனை அளிக்கப்படாது. ஏனெனில் வீரர்கள் யாரும் பயிற்சியை தவிர்க்கவில்லை. ஓய்வு நேரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் வீரர்கள் பங்கேற்பதில் தவறு இல்லை” என்று பதிலளித்தார்.

இவ்வாறு பாலியல் தொழில் பெண்களுடன் மெக்சிகோ கால்பந்து வீரர்கள் சிக்குவது என்பது புதிதல்ல. 2010ல் ஒரு போட்டியில் பெற்ற வெற்றியை இதுபோன்றுதான் மெக்சிகோ வீரர்கள் கொண்டாடினர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தவிர இரண்டு பேருக்கு 6 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதேபோல் 2011 ஜூனில், கோபா அமெரிக்கா போட்டியில் பங்கேற்க அர்ஜென்டீனா சென்றபோதும், இதுபோல் மெக்சிகோ வீரர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போதும் உல்லாசமாக இருந்த வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், 6 மாதம் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.

பொதுவாக, மிகப்பெரும் விளையாட்டுப் போட்டிகளின் போது, போட்டி நடக்கும் நாளுக்கு முந்தைய நாள், வீரர்கள் அவர்கள் மனைவியுடனோ, பெண் தோழிகளுடனோ உறவு கொள்ளச் சொல்வது என்பது சில கால்பந்து அணிகளின் ஸ்டிராடஜியாகும். கிரிக்கெட்டில் கூட இது நடப்பதுண்டு. வீரர்கள் கான்ஃபிடன்ட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட ஸ்டிராடஜி கையாளப்படும் என வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இங்கே மெக்சிகோ அணியினர் எந்த வகையான ஸ்டிராடஜியை கையாள்கிறது என்பது தெரியவில்லை!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close